இறைச்சிக்காக மாடுகள் விற்பனை: மத்திய அரசு உத்தரவுக்கு எதிரான இடைக்காலத் தடை நாடு முழுவதும் பொருந்தும்

மாடு உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக் கூடாது என மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின் மீது விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நாடு முழுவதுக்கும் பொருந்தும்
இறைச்சிக்காக மாடுகள் விற்பனை: மத்திய அரசு உத்தரவுக்கு எதிரான இடைக்காலத் தடை நாடு முழுவதும் பொருந்தும்

மாடு உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக் கூடாது என மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின் மீது விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நாடு முழுவதுக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதனிடையே, அந்த உத்தரவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்திருப்பதால், அதில் சில திருத்தங்களை மேற்கொள்ளப் போவதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பசு, எருது, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக் கூடாது என்று மத்திய அரசு கடந்த மாதம் 26-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், மாடுகளை வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்காக மட்டுமே பரஸ்பரம் விற்பனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசின் இந்த முடிவு, தனிமனித உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. இதனிடையே, மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக கேரளம் மற்றும் மேகாலயம், புதுச்சேரி சட்டப் பேரவைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனிடையே, மத்திய அரசின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.
இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக இருவேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கால்நடைகள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடானது, விரும்பிய உணவை உண்ணும் உரிமையைப் பறிக்கும் செயல் என்றும், இதனால், மாட்டிறைச்சி வர்த்தகத்தில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுக்கள் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இரு வாரங்களுக்குள் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டது. இந்நிலையில், அந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.நரசிம்மா,'கால்நடை விற்பனை தொடர்பான உத்தரவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் புதிய அறிவிக்கை வெளியிடப்படும்' என்றார்.
அந்த அறிவிக்கையை உடனடியாக அமலுக்குக் கொண்டு வராமல், அதன் மீது கருத்தறிய குறிப்பிட்ட காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அப்போது வலியுறுத்தினர்.
மேலும், இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை பிறப்பித்த இடைக்காலத் தடை நாடு முழுவதுக்கும் பொருந்தும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com