
புது தில்லி: வழக்கத்தை விட, சிசேரியன் அறுவை சிகிச்சைகள் அதிகரித்திருப்பதால், ஒவ்வொரு தனியார் மருத்துவமனையும், சிசேரியன் மற்றும் சுகப் பிரசவம் குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி அனுப்பியுள்ள இந்த சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கும் உத்தரவுகள், மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் கீழ் அனுமதி பெற்று நடத்தப்படும் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் பொருந்தும்.
கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களில் சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைப் பேறு நடப்பது அதிகரித்து வருவது குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் மேனகா காந்தி தனது வருத்தத்தை பதிவு செய்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுவாக பிரசவ எண்ணிக்கையில் 10-15 சதவீதம் சிசேரியனாக இருக்கலாம். இது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இந்தியாவின் தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மொத்த பிரசவங்களில் முறையே 54 மற்றும் 34 சதவீதம் சிசேரியன் நடப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
அதிகரித்து வரும் 'சிசேரியன் பிரசவங்களைக் குறைக்க நடவடிக்கை' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையில், உண்மையிலேயே தேவைப்படும் பெண்களுக்கு மட்டுமே சிசேரியன் முறையில் பிரசவம் நடப்பதை உறுதி செய்ய மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.