குவாரிகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் வேண்டும்: மத்திய அரசிடம் தமிழகம் வலியுறுத்தல்

ஐந்து ஹெக்டேர் பரப்பளவுக்கும் குறைவாக உள்ள சுரங்கங்கள், குவாரிகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் வலியுறுத்தினார்.
தில்லியில் மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனை அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்த தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத். உடன் தமிழ்நாடு அரசின் தொழில் துறை முதன்மைச் செயலாள
தில்லியில் மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனை அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்த தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத். உடன் தமிழ்நாடு அரசின் தொழில் துறை முதன்மைச் செயலாள
Updated on
2 min read

ஐந்து ஹெக்டேர் பரப்பளவுக்கும் குறைவாக உள்ள சுரங்கங்கள், குவாரிகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக தொடர்பாக தில்லியில் மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனை அவர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, இக்கோரிக்கை தொடர்பான மனுவையும் அவரிடம் அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
உச்ச நீதிமன்றம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவை அளித்த தீர்ப்பின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தடையில்லா சான்றிதழ் பெறாமல் தமிழகத்தில் இயங்கி வந்த 2,048 சுரங்கங்கள், குவாரிகள் ஆகியவற்றில் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தில் கனிமம் சார்ந்த தொழில்கள் மட்டுமல்லாது, கட்டுமானத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை வரி அல்லாத வருவாய், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சுரங்கம், குவாரி குத்தகைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகம் 2017, மார்ச் 14}ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில், சுற்றுச்சூழல் தடையில்லா சான்று இல்லாமல் இயங்கி வரும் சுரங்கம், கனிம வள குவாரிகளை வரன்முறைப்படுத்த ஆறு மாதங்களுக்கு அவகாசம் வழங்கியுள்ளதாகவும், அது தொடர்பான விண்ணப்பங்களை மத்திய அரசு மட்டுமே பரிசீலிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில் ஏற்கெனவே இயங்கி வந்த சுரங்கம், குவாரிகளுக்கான உரிமம் மத்திய, மாநில சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு கனிமம் உள்ள இடங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான குவாரி, சுரங்கங்கள் ஐந்து ஹெக்டர் பரப்பளவுக்கு குறைவானவை. அவற்றை மத்திய அரசு கடைப்பிடித்து வரும் விதிமுறைகளின்படி அணுகினால், சிறிய அளவில் தொழில் செய்து வரும் ஒப்பந்ததாரர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். இதைக் கவனத்தில் கொண்டு சுற்றுச் சூழல் தடையில்லா சான்றிதழ் அளிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐந்து ஹெக்டேர் பரப்பளவுக்குள் உள்ள இடத்துக்கு உரிமம் வழங்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு அளிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன்: இதைத் தொடர்ந்து, மத்திய தொழில், வர்த்தகத் துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது அமைச்சகம் அமைந்துள்ள நிர்மாண் பவனில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் தொழில்துறை முறையீடுகள், தொழில் வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினார்.
பியூஷ் கோயல்: இதேபோல, பிற்பகலில் மத்திய எரிசக்தி, கனிமம், சுரங்கத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை அவரது அமைச்சகம் அமைந்துள்ள சாஸ்திரி பவனில் அமைச்சர் சம்பத் சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் கனிமம், சுரங்கச் சட்டங்க ள் அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இச்சந்திப்புகளின் போது, தமிழ்நாடு அரசின் தொழில்துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, கனிம வளத் துறை ஆணையாளர் ஆர். பழனிச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கோரிக்கை: இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்க வந்த அமைச்சரிடம் தில்லியில் உள்ள தமிழ் பத்திரிகையாளர்கள், தமிழ்நாடு இல்லத்தில் அண்மையில் முதல்வர் வந்த போது பாதுகாப்பு என்ற பெயரில் கெடுபிடி செய்யப்பட்டதையும், இல்லத்துக்குள் பத்திரிகையாளர்கள் வழக்கம் போல அனுமதிக்கப்படாததையும் அமைச்சரின் கவனத்து க்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com