பெங்களூரில் விரைவில் புறநகர் ரயில் சேவை: சுரேஷ் பிரபு

பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
பெங்களூரில் விரைவில் புறநகர் ரயில் சேவை: சுரேஷ் பிரபு
Published on
Updated on
1 min read

பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
பெங்களூரு யஸ்வந்தபுரம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், பெங்களூரு-ஹாசன் இடையேயான புதிய ரயில் சேவையைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:-
பெங்களூருவில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறநகர் ரயில் சேவையை தொடங்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காகும் செலவில் 50 சதவீதத்தை வழங்க மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது. எனவே பணிகள் மே மாதத்தில் தொடங்கி, விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பெங்களூரு- மங்களூரு இடையே விரைவில் ரயில் சேவை: பெங்களூரு-மங்களூரு இடையே ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும். அந்த ரயிலுக்கு கோமட்டேஸ்வரா என்று பெயரிடப்படும். மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு 200 கி.மீ தூரத்துக்கு இரு வழித்தட ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 548 கி.மீ ரயில் பாதைகளை மின் மயமாக்கும் பணிகளும், 92 கி.மீ புதிய ரயில் பாதைகள் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
பெங்களூரு-மும்பை இடையே இருவழிப் பாதை: கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள அனைத்து ரயில்வே திட்டங்களையும் படிப்படியாக தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம். தேசிய அளவில் புதிய ரயில் பாதைகள், ரயில் நிலையங்கள், அடிப்படை கட்டுமான வசதிகள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் செய்து தரப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் பெங்களூரு-மும்பை இடையேயான ரயில் பாதை, இருவழிப் பாதைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனந்த்குமார், அமைச்சர்கள் ஆர்வி தேஷ்பாண்டே, ஏ.மஞ்சு, மேயர் ஜி.பத்மாவதி, மக்களவை உறுப்பினர்கள் முனியப்பா, வீரப்ப மொய்லி, டி.கே.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.

தீவனங்கள் கொண்டு வர கட்டணத்தில் முழு விலக்கு தேவை

விழாவில் முதல்வர் சித்தராமையா பேசியது:-
பெங்களூரு-மங்களூரு இடையேயான மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில்பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 2018-ஆம் ஆண்டு ஆண்டு பிப்ரவரியில் கோமட்டேஸ்வரா மகாமஸ்தாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். இந்தத் திருவிழாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.
கர்நாடகத்தில் வறட்சி நிலவுவதால் ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து கால்நடைகளுக்கு தீவனங்கள் ரயில் மூலம் கொண்டு வர கட்டணத்துக்கு முழு விலக்கு அளிக்க மத்திய அரசு முன் வர வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com