
தன் முன் நேரில் ஆஜராகாத காரணத்துக்காக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் உள்பட 7 நீதிபதிகளுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத பிடியாணைகளை கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன் உச்ச நீதிமன்றத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், தனது பணியிட மாற்றத்துக்கு கர்ணன் தானே தடைவிதித்துக் கொண்டார். இதையடுத்து, அவருக்கு வழக்குகளை ஒதுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
'நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் குறிவைக்கப்படுகிறேன்' என்று கூறிய நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்றத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்து நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
இதையடுத்து, நீதிபதி கர்ணன் கடந்த மார்ச் 31-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது, அவர் பதிலளிக்க 4 வாரம் அவகாசம் அளித்த உச்ச நீதிமன்றம், அவர் நீதிமன்றப் பணிகளில் ஈடுபடக் கூடாது என்று விதித்த தடையை திரும்பப் பெற மறுத்துவிட்டது. இதனிடையே, நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவப் பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த அவர் 'உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஊழல் கறை படிந்தவர்கள்' என்று குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், நீதிபதி கர்ணன் செவ்வாய்க்கிழமை தானாக முன்வந்து உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். ஊழல் மற்றும் பதற்றத்தில் இருந்து மக்களைக் காப்பதற்காக தேசநலன் கருதி இந்த உத்தரவைப் பிறப்பிப்பதாக அவர் தெரிவித்தார்.
அதில் 'உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகள் தம் முன் நேரில் ஆஜராகவில்லை. அவர்கள் வரும் 8ஆம் தேதி ஆஜராக வேண்டும். அவ்வாறு ஆஜராகத் தவறும்பட்சத்தில், அவர்களுக்கு எதிராக தில்லி காவல்துறை ஆணையர் அல்லது டிஜிபி மூலம் நிறைவேற்றத்தக்க, ஜாமீனில் வெளிவர இயலாத பிடியாணைகளை வெளியிட வேண்டும்' என்று கொல்கத்தா நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
7 நீதிபதிகளுக்கு மருத்துவப் பரிசோதனை?: முன்னதாக, 'நீதிபதி கர்ணனுக்கு வரும் 4-ஆம் தேதி மனநல மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும்' என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திங்கள்கிழமை உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக, ஆதார் அட்டைகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரான மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகி தனது வாதத்திற்கு இடையே கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி நீதிபதி கர்ணன் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுவாரா என்பது எனக்குத் தெரியாது. மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்த 7 நீதிபதிகளும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளதாக நான் செய்தித்தாளில் படித்தேன் என்றார் முகுல் ரோத்தகி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.