மனநல பரிசோதனை: நீதிபதி கர்ணன் ஒத்துழைக்க மறுப்பு

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன், மனநல மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார். தான் இயல்புநிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நீதிபதி கர்ணனுக்கு மனநலப் பரிசோதனை மேற்கொள்ள கொல்கத்தாவில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு வியாழக்கிழமை சென்ற மருத்துவர்கள்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நீதிபதி கர்ணனுக்கு மனநலப் பரிசோதனை மேற்கொள்ள கொல்கத்தாவில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு வியாழக்கிழமை சென்ற மருத்துவர்கள்.
Published on
Updated on
1 min read

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன், மனநல மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார். தான் இயல்புநிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்துடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்த நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு கொல்கத்தா அரசு மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் மனநல மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 1-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. அந்த மருத்துவக் குழுவினருக்கு உதவுமாறு மேற்கு வங்க காவல் துறை டிஜிபிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த அந்த உத்தரவை அமல்படுத்துவதற்காக, கொல்கத்தா பாவ்லாவ் அரசு மனநல மருத்துவமனையைச் சேர்ந்த 4 மருத்துவர்கள், 20 போலீஸாருடன், நீதிபதி கர்ணனின் இல்லத்துக்கு வியாழக்கிழமை சென்றிருந்தனர். கொல்கத்தாவின் நியூ டவுனில் உள்ள கர்ணனின் இல்லத்தில், சுமார் 2 மணி நேரம் அவருடன் மருத்துவர்கள் விவாதித்தனர்.
அப்போது, அவர் தனக்கு மனநல மருத்துவப் பரிசோதனை நடத்துவதற்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார்.
இதுதொடர்பாக, மருத்துவமனையின் தலைவருக்கு அவர் எழுதிக் கொடுத்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நான் இயல்பாகவும், உறுதியான மனநிலையிலும் இருப்பதால், எனக்கு மனநல மருத்துவப் பரிசோதனை நடத்துவதற்கு மறுப்பு தெரிவிக்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, தலித் சமூகத்தைச் சேர்ந்த நீதிபதியான என்னை அவமதிக்கும் வகையிலும், துன்புறுத்தும் வகையிலும் உள்ளது.
மேலும், என்னிடம் பரிசோதனை நடத்த வேண்டுமெனில் எனது உறவினர்களின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமாகும். எனது மனைவியும், ஒரு மகனும் சென்னையில் இருக்கிறார்கள். மற்றொரு மகன் பிரான்சில் இருக்கிறார். எனவே, எந்த மருத்துவப் பரிசோதனையும் என்னிடம் நடத்த முடியாது.
எனவே, நீதிமன்றங்களின் மாண்பையும், கண்ணியத்தையும் காப்பதற்கு, உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, எனக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உடனடியாக முடிக்க வேண்டும். நாம் அனைவரும் மனிதர்கள்தான்; தவறே செய்யாதவர்கள் அல்ல.
உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து எனக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததை அடுத்து, நீதித் துறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். எனவே, நீதிபதிகள் 7 பேரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், நீதிபதி கர்ணனுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் இடையேயான மோதல் மேலும் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com