நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை: கர்ணனின் உத்தரவை வெளியிட ஊடகங்களுக்குத் தடை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை: கர்ணனின் உத்தரவை வெளியிட ஊடகங்களுக்குத் தடை
Published on
Updated on
2 min read

புது தில்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் கர்ணன்,  மனநல பரிசோதனைக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

மேலும், கொல்கத்தா நீதிபதி கர்ணனின் உத்தரவை வெளியிட ஊடகங்களுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வழக்கின் பின்னணி :
சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றி வந்தவர் சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன். இவரை, கடந்த ஆண்டு கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்த உத்தரவுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்ததோடு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்த புகார்க் கடிதம் ஒன்றையும் பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அனுப்பிவைத்தார் கர்ணன். அந்தக் கடிதத்தில் நீதிபதிகளின் ஊழல் குறித்து எழுதியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கான ஆதாரங்கள் எதுவும் அவர் சமர்ப்பிக்கவில்லை. அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ள நபர்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.  

கர்ணனின் இந்த நடவடிக்கையை அவமதிப்பாகக் கருதிய உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. அதுமட்டுமன்றி, இந்த வழக்கில் கர்ணனை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படியும் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த மார்ச் 31-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் கர்ணன். அப்போது உச்ச நீதிமன்றம் அவருடைய விளக்கத்துக்கு 4 வார  காலம் அவகாசம் கொடுத்ததோடு, 'நீதிமன்றப் பணிகளில் கர்ணன் ஈடுபடக் கூடாது' என்று ஏற்கெனவே விதித்த உத்தரவையும் திரும்பப் பெற மறுத்துவிட்டது.

மேலும், நீதிபதி கர்ணனுக்கு (4.5.2017) மனநலப் பரிசோதனை நடத்தி, அந்த அறிக்கையை வரும் 8-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகள் அளித்த இந்த உத்தரவைக் கண்டு அஞ்சாத கர்ணன், ''அதைப் பிறப்பித்த நீதிபதிகளுக்குத்தான் மனநல மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும்'' என பதில் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், 'இந்தப் பரிசோதனையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட குழு செய்யவேண்டும்' என்றும் அந்த உத்தரவில் கூறியிருந்தார். அதோடு நிறுத்தாமல், 'ஜே.எஸ்.கெஹர் உள்ளிட்ட 7 நீதிபதிகளும் எனக்கு முன்னால் ஆஜராக வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 7 நீதிபதிகளும் ஆஜராகாத நிலையில், அந்த 7 பேருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்து மற்றோரு உத்தரவைப் போட்டு அதிரவைத்தார். இதனால், நீதிபதி கர்ணனுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் இடையேயான மோதல் மேலும் அதிகரித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட உச்சநீதிமன்ற நீதிபதிகள் 8 பேருக்கும் 5 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com