'புதிதாக 91 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல்'

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறும் முடிவு எடுக்கப்பட்ட பிறகு, புதிதாக 91 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
Published on
Updated on
1 min read

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறும் முடிவு எடுக்கப்பட்ட பிறகு, புதிதாக 91 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக வாங்கி குவிக்கப்பட்டுள்ள சொத்துகளை கணக்கில் கொண்டு வருவது தொடர்பான 'ஆபரேஷன் க்ளீன் மணி' திட்டத்தின் இணையதளத்தை தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அருண் ஜேட்லி தொடக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:
உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவது தொடர்பான முடிவால், பொருளாதாரத்தை மின்னணுமயமாக்கும் நடவடிக்கை அதிகரித்துள்ளது. வருமான வரி வளையத்துக்குள் புதிதாக ஏராளமான நபர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்த முடிவு எடுக்கப்பட்ட பிறகு, புதிதாக 91 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த போக்கானது, மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறும் முடிவுக்குப் பிறகு, மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியம் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம், மிகப்பெரிய அளவில் ரொக்கம், வரி ஏய்ப்பு பணம் ஆகியவற்றை வைத்திருப்பது பாதுகாப்பானதல்ல என்ற ஒரு செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள், இனிமேல் பாதுகாப்பாக இருக்க முடியாது.
பொது மக்களின் நலனுக்காகத்தான் வரிகள் வசூலிக்கப்படுகின்றன. நேர்மையாக வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வோருக்கு, உதவி செய்யும் இந்த நடைமுறை தொடரும். வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாமல் இருப்போர்தான், பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
நிகழ்ச்சியில் மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியத் தலைவர் சுஷில் சந்திரா பேசியதாவது:
நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரையிலான காலகட்டத்தில், பணத்தை டெபாசிட் செய்தவர்கள் குறித்த விவரங்களை வருமான வரித்துறையும், புள்ளி விவரத்தை சேகரிக்கும் அமைப்பும் சேகரித்துள்ளன; இதனைக் கொண்டு, 'ஆபரேஷன் க்ளீன் மணி' திட்டத்தின்கீழ், அத்தகைய நபர்கள் 'அதிக ஆபத்து', 'சராசரி ஆபத்து', 'குறைந்த மற்றும் மிகக்குறைந்த ஆபத்து' என்று 3 பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சம் பேர், அதிக ஆபத்து எனும் பிரிவின் கீழ் வருகின்றனர். அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது.
7.54 லட்சம் பேர், சராசரி ஆபத்து எனும் பிரிவின்கீழ் வருகின்றனர். அவர்களை வருமான வரித்துறை தொடர்பு கொண்டு வருகிறது. 5.95 லட்சம் பேர், குறைவான ஆபத்து பிரிவின்கீழும், 3.41 லட்சம் பேர் மிகக்குறைந்த ஆபத்து எனும் பிரிவின்கீழும் வருகின்றனர். இவர்கள் வரி எதையும் நிலுவையில் வைத்துள்ளனரா? என்று வருமான வரித்துறை ஆய்வு செய்து வருகிறது.
புதிதாக 91 லட்சம் பேர், வருமான வரி கணக்குத் தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட, ரூ.1.46 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்புக்கு வருமான வரிக் கணக்கு காட்டப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com