பத்திரிகை சுதந்திரம் பகுத்தறிந்து செயல்பட வேண்டும்: தினத்தந்தி விழாவில் பிரதமர் பேச்சு

பத்திரிகை என்பது அரசியல்வாதிகளைப் பின்தொடர்வது மட்டுமல்லாமல் மக்கள் நலனிலும் அக்கறை காட்ட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி, திங்கள்கிழமை தெரிவித்தார்.
பத்திரிகை சுதந்திரம் பகுத்தறிந்து செயல்பட வேண்டும்: தினத்தந்தி விழாவில் பிரதமர் பேச்சு

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெற்ற தினத்தந்தி பத்திரிகையின் பவள விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

அப்போது பத்திரகை தொடர்பாக அவர் பேசியதாவது:

தற்போது பெரும்பாலான ஊடகங்களின் பணி அரசியலைச் சுற்றியே நிகழ்கிறது. இந்தியா என்பது எங்களைப் போன்ற அரசியல்வாதிகளையும் தாண்டியது. இங்கு 125 கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்கள்தான் இந்தியாவின் அடையாளம். எனவே இந்திய மக்களின் சாதனை நிகழ்வுகளையும் பத்திரிகைகள் வெளிக்கொண்டு வரவேண்டும்.

உலக அளவில் பருவநிலை மாற்றம் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற செய்திகளில் அவற்றின் உண்மை நிலை குறித்து மக்களுக்கு பத்திரிகையால் மட்டும் தான் எளிதாக விளக்க முடியும். இயற்கை தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். 

பத்திரிகை சுதந்திரத்தை சரியாகப் பின்பற்ற வேண்டும். விமர்சனங்களில் மாண்பு அவசியம். இந்தச் சுதந்திரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும். இதனை தவறாகப் பயன்படுத்தி போலியான, தேவையற்ற செய்திகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கக் கூடாது. 

ஜனநாயகத்தின் நான்காம் தூண் பத்திரிகை என மகாத்மா காந்தி கூறியுள்ளார். எனவே அதன்படி செயல்பட வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் பத்திரிகைகள் செய்திகளை மட்டும் கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாமல் நம்மை சிந்திக்கவும் வைக்கிறது. உலகம் முழுவதுமாக நிகழ்வுகளை நம்மிடம் கொண்டு சேர்க்கிறது.

பிராந்திய மொழிப் பத்திரிகைகளைக் கண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அச்சம் கொண்டனர். எனவே அதனை முடக்க நினைத்தனர். அதனால் தான் 1878-ம் வருடம் பிராந்திய பத்திரிகைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அன்று முதல் இன்று வரை பிராந்திய மொழிப் பத்திரிகையின் சேவை இன்றியமையானதாக உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com