

2008 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் மூளையாகச் செயல்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீதை வீட்டுக்காவலில் இருந்து விடுவிப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது.
இவ்விவகாரம் தற்போது உலக நாடுகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு இந்தியா, அமெரிக்கா கடும் கண்டன் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதுபோல, ஹபீஸ் சயீதை மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும், அவன் மீதான அனைத்து பயங்கரவாத செயல்கள் குறித்து விசாரணை நடந்த வேண்டும் எனவும் அமெரிக்கா பாகிஸ்தானிடம் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் சுபாஷ் பாம்ரே கூறியதாவது:
பயங்கரவாதம் என்பது உலகளாவிய அச்சுறுத்தலாக உள்ளது. அது உடனடியாக ஒழிக்கப்பட வேண்டியதாகும். பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் எல்லை மீறல் பிரச்னை உள்ளிட்டவை குறித்து இந்தியா, பாகிஸ்தான் அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அச்சமயங்களில் பாகிஸ்தான் அரசு சரியாகப் பேசினாலும், அவர்களின் செயல்பாடுகள் தவறாக உள்ளது. இந்த இரண்டு விவகாரங்களிலும் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுகிறது.
இந்தியா எப்போதுமே பாகிஸ்தானுடன் நல்லுறவுடன் இருக்கவே விரும்புகிறது. ஆனால், தற்போது அவர்கள் ஹபீஸ் சயீதை விடுவித்து அடுத்த பிரச்சினையை உருவாக்கியுள்ளனர். இது உலக நாடுகளிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் ஜனநாயகத்தின் ஆட்சி நடைபெறவில்லை. அவர்களின் அரசாங்கம் பலவீனமாக உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் கைப்பாவையாக அந்நாட்டு அரசு செயல்படுகிறது. எத்தனை முறை இந்தியா அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண நினைத்தாலும் அவர்கள் தொடர் விதிமீறல் செயல்களில் மட்டுமே ஈடுபடுவதாகத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.