
புதுதில்லி: தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாக்குவாதம் ஒன்றில், பெண் பயணி ஒருவரும், பெண் ஊழியர் ஒருவரும் மாறி மாறி அறைந்து கொண்ட பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது பற்றி விமான நிலைய காவல் கட்டுப்பாட்டு அறை சார்பாக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
இன்று அதிகாலை 04.55 மணியளவில் மூன்றாவது உள்நாட்டு முனையத்தின் சோதனைச் சாவடி ஒன்றில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக விமான நிலைய காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. அங்கு சென்று விசாரித்த போது, அஹமதாபாத் செல்ல வேண்டிய பெண் பயணி ஒருவரும், ஏர் இந்தியா நிறுவன பெண் ஊழியர் ஒருவரும் தகராறில் மாறி மாறி அறைந்து கொண்ட சம்பவம் தெரிய வந்தது.
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவினைச் சேர்ந்த அந்த பெண் பயணி அதிகாலை 05.00 மணிக்கு அஹமதாபாத் புறப்படும் ஏர் இந்தியா விமானத்தில் செல்ல வேண்டியவர். ஆனால் விமானம் ஏறுவதற்கு முன்பான வழக்கமான சோதனைகளுக்கு மிகவும் தாமதமாக 04.18 மணி அளவில் அவர் வந்துள்ளார்.
இதன் காரணமாக ஏர் இந்தியா நிறுவன பெண் ஊழியர் அவரை அனுமதிக்க மறுத்துள்ளார். இதன் காரணமாக இருவருக்குள்ளும் வாய்த் தகராறு எழுந்துள்ளது. விரைவில் அது கைகலப்பாக மாறியுள்ளது. அந்த பெண் பயணி ஊழியரை அறைய பதிலுக்கு அவரும் திரும்பி அறைந்திருக்கிறார்.
இவ்வாறுஅவர் தெரிவித்தார்.
பின்னர் இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'பெண் பயணிக்கும் ஊழியருக்கு இடையேயான பிரச்னை சுமுகமாக தீர்க்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.