60 நாட்களில் 50 தற்கொலைகள்: அதிர வைக்கும் பயிற்சி வகுப்புகளின் பயங்கர முகம்! 

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடந்த இரண்டு மாதங்களில் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி இடங்களுக்கான தனியார் பயிற்சி வகுப்புகளில் பயின்ற, 50 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட... 
60 நாட்களில் 50 தற்கொலைகள்: அதிர வைக்கும் பயிற்சி வகுப்புகளின் பயங்கர முகம்! 
Published on
Updated on
2 min read

ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடந்த இரண்டு மாதங்களில் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி இடங்களுக்கான தனியார் பயிற்சி வகுப்புகளில் பயின்ற, 50 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.     

நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கு என 'நீட்' எனப்படும் தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல ஐஐடி உள்ளிட்ட நாட்டின் முக்கிய கல்வி நிலையங்களில் பொறியியல், மேலாண்மை உள்ளிட்ட கல்வி பயில்வதற்கு என தனியான வெவ்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தற்பொழுது இத்தகைய நுழைவுத் தேர்வுகளுக்கு மேனிலை கல்வி பயிலும் மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு தனியார் பயிற்சி மையங்கள் வாயிலாக சிறப்பு வகுப்புகளை நடத்தப்படுகின்றன. அத்தகைய வகுப்புகள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் பரவலாக நடைபெறுகின்றன. அத்தகைய வகுப்புகளில் மாணவர்கள் நடத்தப்படும் விதம் மற்றும் பாடத்திட்டங்கள் அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடந்துள்ளன.

குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடந்த இரண்டு மாதங்களில் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி இடங்களுக்கான தனியார் பயிற்சி வகுப்புகளில் பயின்ற, 50 மாணவர்களை தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சித் தகவல், குழந்தைகள் உரிமைக்கான போராடும் அரசு சாரா அமைப்புகள் மேற்கொண்ட  ஆய்வில் வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவருமே எதோ ஒரு வகையில் இத்தகைய பயிற்சி வகுப்புகள் மற்றும் மதிப்பெண்னை நோக்கி உந்தித் தள்ளும் பாடத் திட்டங்கள் தரும் அழுத்தம் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொள்வதாக தெரிய வந்துள்ளது.  

உதாரணமாக ஏழை  வாகன ஓட்டுநர் ஒருவரின் மகளான சம்யுக்தா +2 வகுப்பில் 95% சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர். மருத்துவராக வேண்டும் என்பதை கனவாக கொண்டவர். இதன் பொருட்டு மூன்று மாதங்களுக்கு முன்னதாக ஹைதராபாத்தில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனம் ஒன்றில் சேர்ந்தவர், கடந்த திங்கள் அன்று தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்துள்ள தற்கொலைக்கடிதத்தில் இந்த படிப்பினை தொடர்ந்து படிக்க இயலவில்லை என்பதனை குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சம்யுக்தாவின் தந்தை, 'இத்தகைய வகுப்புகளில் தங்களது குழந்தைகள் எத்தகைய அழுத்தத்தில் உள்ளார்கள் என்பதை பெற்றோர்கள் அறிய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேபோல ஹைதராபாத்தில் உள்ள மற்றொரு மையத்தில் பயின்ற 17 வயது மாணவன் ஒருவன் அங்குள்ள ஆசிரியர்கள், 'அவன் இங்கு வந்து படிப்பதற்கு லாயக்கில்லை; தெருவில்தான் திரிய வேண்டும்' என்று அவமரியாதை செய்து பேசியதால் ஐந்தாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளான். . ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து விட்டான்.     

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளாரான அச்சிதா ராவ், ' தங்கள் மனம் போன போக்கில் செயல்படும் இத்தகைய மையங்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதியப்பட வேண்டும்;அவர்கள் குழந்தைகளை மன மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்தக் கூடாது. ஒரு சில நிறுவனங்களை இழுத்து மூடினால்தான், பிறருக்கு புத்தி வரும் என்றும் தெரிவித்துள்ளார்.      

இத்தகைய சம்பவங்களுக்குப் பிறகு தற்பொழுதுதான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துள்ள இரு மாநில அரசுகளும் இதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. முதல்கட்டமாக தனியார் கல்லூரிகளின் மேலாளர்களை சந்தித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி மாணவர்கள் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்துக்கு மேலாக வகுப்புகளில் பங்கேற்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், அவர்களை ஆசிரியர்கள் வார்தைகளால் திட்டுவதோ அல்லது தாக்குவதோ தடை செய்யபப்டுகிறது என்று தெரிவித்துள்ளார். அத்துடன் மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்கு என்று பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் கல்லூரி மற்றும் மையங்களில்  நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மனநல நிபுணரான வீரபத்ர காண்ட்லா,'கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களை நாம் எளிதாக குறை கூறுகிறோம்.ஆனால் இத்தகைய மையங்களில் சேர்த்து எப்பாடு பட்டாவது மதிப்பெண்களை பெற வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். எனவே அவர்களும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். 

(நன்றி: என்.டி.டி.வி)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com