இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அமர்நாத் தாக்குதல்: பயங்கரவாதி சுட்டுக்கொலை

அமர்நாத் தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி அபு இஸ்மாயில் உள்பட இருவரை பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:53 pm

DIN

அமர்நாத் தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி அபு இஸ்மாயில் உள்பட இருவரை பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனர்.
இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். அந்த வகையில், நிகழாண்டு ஜூன் மாதம் முதல் இந்த அமர்நாத் யாத்திரை தொடங்கியது.
இந்நிலையில், அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத் தகவல்கள் வந்ததை அடுத்து, யாத்திரை செல்லும் வழிநெடுகிலும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இருந்தபோதிலும், கடந்த ஜூலை 10-ஆம் தேதி, அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 8 யாத்ரீகர்கள் பலியாயினர். 19-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இத்தாக்குதலில் ஈடுபட்டது லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைப் பிடிப்பதற்காக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை நூற்றுக்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்தது. அவர்களுடன் பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், அமர்நாத் தாக்குதல் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி அபு இஸ்மாயிலும், அந்த அமைப்பைச் சேர்ந்த மற்றொரு பயங்கரவாதியான சோட்டா காசிம் என்பவரும் ஸ்ரீநகர் அருகே உள்ள நவ்கம் பகுதியில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நவ்கம் பகுதிக்கு பாதுகாப்புப் படையினரும், போலீஸாரும் வியாழக்கிழமை காலை சென்றனர். பின்னர், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கூறப்பட்ட கட்டடத்தை அவர்கள் சுற்றிவளைத்தனர். அப்போது, இதனை அறிந்த இரண்டு பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இறுதியில், பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் டிஜிபி எஸ்.பி. வைத் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் நான்காவது முக்கிய பயங்கரவாதி அபு இஸ்மாயில் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, பர்ஹான் வானி, சப்ஸர் பட், அபு டுஜானா ஆகிய பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.