மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் - தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்திப்பு! 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் - தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்திப்பு! 

தில்லி: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவருக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாகவும், வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உட்பட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து மனு கொடுத்திருந்தனர்.

முதல்வருக்கு எதிராக மனு கொடுத்தது குறித்து செப்டம்பர் 15ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி 19 எம்எல்ஏக்களுக்கும் அவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நிலையில், எம்எல்ஏ ஜக்கையன் மட்டும் சபாநாயகர் முன்பு ஆஜராகி, முதல்வருக்கு எதிராக மனு கொடுத்ததை திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் கூறி விளக்கம் அளித்தார்.

சபாநாயகர் அளித்த காலக்கெடுவுக்குள் நேரில் விளக்கம் அளிக்கத் தவறிய 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்வது குறித்து முதல்வர் பழனிசாமி, சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர், அவைத் தலைவர் தனபாலுடன் ஆலோசனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 எம்.எல்.ஏக்கள் தற்பொழுது சபாநாயகர் தனபால் தங்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.     

இத்தகைய பரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தமிழகம் வருவார் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்பொழுது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தில்லியில்  சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டாலும் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து அவர்கள் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com