
கேரளத்தில் இருந்து மாயமாகி ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இளைஞர், ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசர்கோடு மாவட்டம், பட்னே நகர இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் ரஹ்மான், இதுகுறித்து கூறியதாவது:
பட்னேவைச் சேர்ந்த முர்ஷீத் முகமது என்ற இளைஞர் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக சமூக வலைதளம் ஒன்றின் மூலம் எனக்கு செய்தி கிடைத்தது.
அவர் இறந்த தேதி போன்ற பிற தகவல்கள் தெரியவில்லை என்று அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்தத் தகவலை சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
கேரளத்தைச் சேர்ந்த முர்ஷீத் முகமது உள்பட 21 பேர் கடந்த ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றனர். அவர்கள் அனைவரும் சிரியாவில் செயல்பட்டுவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதே பட்னே நகரைச் சேர்ந்த டி.கே.ஹஃபீசுதீன் (24) என்ற இளைஞர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...