சுடச்சுட

  

  முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு: 12-ஆவது முறையாக சி.பி.சி.ஐ.டி ரகசிய அறிக்கை!

  By DIN  |   Published on : 20th April 2017 04:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ramajayam

   

  மதுரை: திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 12-ஆவது முறையாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சி.பி.சி.ஐ.டி ரகசிய அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

  திருச்சி மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி காலை, திருச்சி அருகே கல்லணை சாலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

  தொழில் அதிபராகவும், கல்வி நிறுவனங்களின் தலைவராகவும் இருந்த ராமஜெயம் கொலை, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

  இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைத்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 2012 ஜூன் மாதம் உத்தரவிட்டார். சி.பி.சி.ஐ.டி., போலீஸாரும் விசாரணையை தொடங்கினர். ராமஜெயத்தின் அரசியல் எதிரிகள் யார்? தொழில் ரீதியாகவும், உறவினர் வகையிலும் எதிரிகள் யார் என்பது குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ராமஜெயத்தின் உடல் கிடந்த பகுதியில் உள்ள செல்லிடப்பேசி டவர்களில் பதிவான எண்கள், அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் கிடைத்த செல்லிடப்பேசி எண்களை வைத்தும் விசாரணை நடந்தது. ஆனால், போலீஸாரால் இதுவரை குற்றவாளிகளை நெருங்கவே முடியவில்லை.

  ராமஜெயத்தின் மனைவி லதா, தனது கணவர் கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார்.

  ஆனால், சிபிசிஐடி போலீஸார், குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம், சிறிது கால அவகாசம் கொடுத்தால் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம் என உயர்நீதிமன்ற கிளையில் பதில் மனுதாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் தொடர்ந்து பலமுறை அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், வழக்கில் முன்னேற்றம் இருப்பதாக தெரியவில்லை.

  ராமஜெயம் கொலை செய்யப்பட்டு கடந்த மார்ச் 29 -ஆம் தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், சி.பி.சி.ஐ.டி., போலீஸார் குற்றவாளிகள் குறித்து முக்கிய தடயங்களையோ, தகவல்களையோ திரட்ட முடியாத நிலையிலேயே உள்ளனர்.  

  இந்நிலையில் மதுரை உயர் நீதிமன்றத் கிளையில் சி.பி.சி.ஐ.டி 12-ஆவது முறையாக ரகசிய அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. 

  அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை ஏப்ரல் - 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai