காங்கிரஸில் இருந்து மணிசங்கர் அய்யர் இடைநீக்கம்

பிரதமர் மோடியை தரந்தாழ்ந்த வகையில் விமர்சித்ததற்காக மத்திய முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸில் இருந்து மணிசங்கர் அய்யர் இடைநீக்கம்

பிரதமர் மோடியை தரந்தாழ்ந்த வகையில் விமர்சித்ததற்காக மத்திய முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறும் அவரிடம் அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய அமைச்சராகவும், நாடாளுமன்ற எம்.பி.யாகவும் பல முறை பதவி வகித்தவர் மணிசங்கர் அய்யர். காங்கிரஸ் கட்சியின் செயற்குழு பொறுப்புகளிலும் அவர் இருந்துள்ளார். விமர்சனத்துக்குரிய பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது அவரது வாடிக்கை.
இந்த நிலையில், பிரதமர் மோடியை "இழிவானவர்' என்று அவர் விமர்சித்தது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது. ஜாதிய அடிப்படையிலேயே பிரதமரை அவர் இவ்வாறு குறிப்பிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு நடுவே, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் மணிசங்கரின் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தார். பிரதமரிடம் மன்னிப்பு கேட்குமாறும் அவரிடம் ராகுல் கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து தாம் தெரிவித்த கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் மணிசங்கர் அய்யர் கூறினார்.
இருப்பினும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை பரிந்துரைந்தது. இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. மேலும், காங்கிரஸில் இருந்து மணிசங்கர் அய்யர் இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2015-இல் பாரீஸில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை நியாயப்படுத்தி மணிசங்கர் தெரிவித்த கருத்தும் சர்ச்சைக்குள்ளானது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com