சுடச்சுட

  

  அதிமுக பொதுச் செயலர் நியமனம்: தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில்

  By DIN  |   Published on : 11th March 2017 04:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  VK_Sasikala

   

  அதிமுக பொதுச் செயலாளராக தன்னை நியமித்தது செல்லாது என அறிவிக்கக் கோரி அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதங்களுக்குரிய பதிலை வி.கே.சசிகலா வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் இப்புகார் தொடர்பாக மனுக்களை அளித்திருந்தனர்.
  அதிருப்தி எம்.பி.க்கள் புகார்: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அணியில் மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் தலைமையில் அவர் உள்ளிட்ட இரு மாநிலங்களவை உறுப்பினர்கள், 10 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த மாதம் தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர்.
  இதே விவகாரத்தில் அதிமுகவில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட சசிகலா புஷ்பாவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனுக்களில், "அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்ய பொதுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகே கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யவோ போட்டியிடவோ தகுதி பெறுகிறார். அந்த வகையில் 2012-இல் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, பொதுச் செயலாளராக தகுதி பெறவில்லை. அதுமட்டுமின்றி, ஜெயலலிதா இறந்தவுடன் இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா, கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோரை நீக்கியுள்ள நடவடிக்கை சட்டவிரோதமானது. எனவே, சசிகலா தலைமையை அங்கீகரிக்கக் கூடாது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
  ஆணையம் கடிதம்: இந்த மனுக்களுக்கு பதில் அளிக்குமாறு பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் கடந்த பிப்ரவரி 2,15,17 ஆகிய தேதிகளில் கடிதம் அனுப்பியது. இந்த கடிதங்களுக்குரிய பதிலை சசிகலா சார்பில் அதிமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினார்.
  ஆனால், "தேர்தல் ஆணையத்தில் பதிவாகியுள்ள அதிமுக கட்சி நிர்வாகிகள் பட்டியலில் டி.டி.வி. தினகரன் பெயர் இல்லை' என சுட்டிக்காட்டி இந்த விவகாரத்தில் மார்ச் 10-ஆம் தேதிக்குள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தி மீண்டும் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் கடந்த 3-ஆம் தேதி கடிதம் அனுப்பியது.
  விளக்கம் என்ன?: இதையடுத்து, சசிகலா கையெழுத்திட்ட பதில் கடிதம் தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது. அவரது சார்பில் வழக்குரைஞர்கள் பரணி குமார், ராகேஷ் குமார் ஆகியோர் அந்தக் கடிதத்தை அளித்தனர். மொத்தம் 70 பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
  என்னைப் பொதுச் செயலாளராக நியமித்ததில் கட்சி விதி மீறல் இல்லை. எனக்கு எதிராக புகார் கூறியுள்ளவர்கள் அனைவரும் பொதுக் குழுவில் எனது பெயரை பொதுச் செயலாளர் பதவிக்கு முன்மொழிந்தவர்கள். அவைத் தலைவர் மதுசூதனனும் ஒப்புதல் தெரிவித்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எனக்கு எதிராக அவர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை.
  2012-இல் கட்சியில் இருந்து என்னை நீக்கி பிறப்பித்த உத்தரவை சில மாதங்களிலேயே ஜெயலலிதா ரத்து செய்து விட்டார். எனவே, கட்சி உறுப்பினராகவே தொடருகிறேன். எனவே, உறுப்பினர் பதவியில் ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக இல்லை எனக் கூறி பொதுச் செயலாளராக என்னைக் தேர்வு செய்த பொதுக் குழுவின் நடவடிக்கை தவறு என மனுதாரர்கள் கூறுவதை ஏற்கக் கூடாது. அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி. தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விவரத்தை தேர்தல் ஆணையம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  தன்னை கட்சியின் பொதுக் குழுவில் தலைமை பதவிக்கு முன்மொழிந்து பன்னீர்செல்வம், மதுசூதனன் உள்ளிட்டோர் கையெழுத்திட்ட ஆவணங்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் விவரம், டி.டி.வி. தினகரன் நியமன அறிவிப்பு, கட்சி விதிகள் அடங்கிய குறிப்புகளின் நகல்கள் ஆகியவற்றையும் தனது கடிதத்துடன் சசிகலா இணைத்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai