

உலகளவில் பருத்தி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகித்து வருகிறது என்று மாநிலங்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இது தொடர்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:
கடந்த ஆண்டில் "பிடி. காட்டன்' பருத்தி பயிர் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளானது. குறிப்பாக ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் இந்த வகை பருத்தியில் பூச்சித் தாக்குதல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், விவசாயிகளால் எந்த மாநிலத்திலும் பாரம்பரிய பருத்தி ரகங்கள் பயிரிடும் முறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் இல்லை.
கடந்த மூன்று ஆண்டுகளில் பருத்தி ஏற்றுமதி அளவைப் பொருத்தமட்டில், 2014-15இல் 1,142.53 ஆயிரம் டன்னும், 2015-16இல் 1,347.07 ஆயிரம் டன்னும், 2016-17-இல் 1000.09 ஆயிரம் டன்னும் பருத்தி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் பருத்தி உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக சீனா இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளன என்று அமைச்சர் ரூபாலா அந்த பதிலில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.