
புவனேஷ்வர்: ஒடிஷா மாநிலம் புவனேஷ்வருக்கு அருகில் உள்ள தித்லகார் ரயில் நிலையத்தில் என்ஜின் உதவியின்றி சுமார் 10 கி.மீ. பயணித்த ரயிலால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒடிசா மாநிலத்தின் பூரி மாவட்டத்திலிருந்து அகமதாபாத்திற்கு செல்லும் அகமதாபாத்-பூரி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சனிக்கிழமையன்று அகமதாபாத்திலிருந்து கிளம்பியது. அந்த ரயிலானது சனி இரவு 10 மணியளவில் புவனேஷ்வரிலிருந்து 380 கி.மீ தொலைவுள்ள தித்லகார் என்னும் ரயில் நிலையத்தை அடைந்தது.
அங்கு ரயில்பெட்டிகளின் என்ஜின் மாற்றியமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்பொழுது 'ஸ்கிட் பிரேக்' என்னும் வழக்கமான தடுப்பு முறையை பயன்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக ரயில் பெட்டிகள் தாறுமாறாக பின்னோக்கி வேறு திசையில் ஓட ஆரம்பித்தது.
இதன் காரணமாக பயணிகள் அலறினர். உடனடியாக ரயிலை நிறுத்த வழி தெரியாத ரெயில்வே அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர். அதேசமயம் ரயில் தண்டவாளத்தில் கற்குவியல்களை பயன்படுத்தி ரெயில்வே அதிகாரிகள் ரெயிலை நிறுத்த முயற்சித்தனர். ஆனால் அந்த கற்களை எல்லாம் உடைத்துக் கொண்டு ரயில் ஓடியது.
இப்படியே சுமார் 10 கி.மீ. வரை ஓடிய நிலையில், அருகில் உள்ள கேசின்கா என்னும் ரெயில்நிலையத்தின் அருகே ரயில் தானாகவே நின்றது. இச்சம்பவம் குறித்து கிழக்கு ரெயில்வே செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இச்சம்பவத்தில் அனைத்து பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. கவனக்குறைவாக செயல்பட்ட இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.