
ஆளில்லா ரயில்வே கடவுப் பாதை 2020 மார்ச் மாதத்துக்குள் முழுவதுமாக அகற்றப்படும் என ரயில்வே வாரியத் தலைவர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள குஷிநகரில் ஆளில்லா கடவுப் பாதையில் ரயில் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 13 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 8 சிறுவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து உயிரிழந்த சிறுவர்களுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தயநாத் இரங்கல் தெரிவித்தார். காயமடைந்த மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஆளில்லா ரயில்வே கடவுப் பாதை குறித்து ரயில்வே வாரியத் தலைவர் அஷ்வானி லோஹானி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 2014-15 ஆம் ஆண்டுகளில் ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையில் சுமார் 109 விபத்துகள் நடைபெற்றுள்ளன. தற்போது நடப்பு ஆண்டின் முதல் விபத்து ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற இந்த விபத்தின் போது அங்கிருந்த ரயில்வே தன்னார்வ தொண்டர் அந்த பள்ளி வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் அந்த ஓட்டுநர் பள்ளி வாகனத்தை நிறுத்தவில்லை.
இந்தியா முழுவதும் மொத்தம் 3,479 ஆளில்லா ரயில்வே கடவுப் பாதை கண்டறியப்பட்டுள்ளது. இவை அனைத்தும் விரைவில் முழுவதுமாக அகற்றப்படும். ஆளில்லா ரயில்வே கடவுப் பாதை 2020-ஆம் வருடம் மார்ச் மாதத்துக்குள் முழுவதுமாக அகற்றப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.