மேற்கு வங்கத்தில் இரு தினங்களுக்கு கருப்பு தினம் கடைப்பிடிப்பு - திரிணமூல் காங்கிரஸ்

அஸ்ஸாமில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் குழு தடுத்து நிறுத்தப்பட்டதை கண்டித்து மேற்கு வங்கம் முழுவதும் இரு தினங்களுக்கு கருப்பு தினத்தை கடைப்பிடிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் இரு தினங்களுக்கு கருப்பு தினம் கடைப்பிடிப்பு - திரிணமூல் காங்கிரஸ்

அஸ்ஸாமில் திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தடுத்து நிறுத்தப்பட்டதை கண்டித்து மேற்கு வங்க மாநிலம் முழுவதும் இரு தினங்களுக்கு கருப்பு தினத்தை கடைப்பிடிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.  

கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் வரைவுப் பதிவேடு தொடர்பாக, அஸ்ஸாம் மாநிலத்தில் நிலவும் நிலையற்ற தன்மையைப் பார்வையிடுவதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அமைத்தார். அந்த குழுவை சில்சார் விமான நிலைய காவல் அதிகாரிகள் வியாழக்கிழமை காலை தடுத்து நிறுத்தினர். 

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை மக்களிடையே தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் என்பதால் கச்சார் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம், வரைவுப் பதிவேடு விவகாரத்துடன் தொடர்பற்ற எந்தவொரு நபரும் மாவட்டத்துக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா கூறியதாவது: 

"அஸ்ஸாம் சென்று மக்களைச் சந்திக்க இருப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. மக்களுக்குத் தொந்தரவு அளிக்கப் போவதில்லை என்ற உத்தரவாதமும் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்டிருந்தது.

அப்படியிருந்தும் கூட திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியே அனுமதிக்காமல், விமான நிலையத்துக்கு உள்ளேயே அடைத்து வைத்துள்ளனர். பெண் உறுப்பினர்களுக்குக் கூட அனுமதி அளிக்கப்படவில்லை. இத்தகைய செயல்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவையாகும்" என்று மம்தா தெரிவித்தார். 

இதையடுத்து, இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் மேற்கு வங்கம் மாநிலம் முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கருப்பு தினத்தை கடைப்பிடிக்கப்போவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், கல்வித் துறை அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜி அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, 

"மக்கள் பிரதிநிதிகளை அஸ்ஸாம் போலீஸார் கையாண்ட விதம் மற்றும் அவர்களை சில்சார் விமான நிலையத்தில் நிறுத்தி வைத்ததை கண்டிக்கிறோம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதால் அவர்களுக்கு அங்கு செல்ல அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால், விதிமுறைகள் அனைத்தும் மீறி எங்களது குழு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

இது அவமானத்துக்குரியது. இதை கண்டிக்கும் வகையில், மேற்கு வங்க மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு தினத்தை கடைப்பிடிக்கிறோம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com