சுதந்திர தின உரையும் கால அளவும் - மீண்டும் நீண்ட உரைக்கு திரும்பிய பிரதமர் மோடி

72-ஆவது சுதந்திர தின விழாவில் சுதந்திர தின உரையை பிரதமர் மோடி புதன்கிழமை 80 நிமிடங்களுக்கு ஆற்றினார்.
சுதந்திர தின உரையும் கால அளவும் - மீண்டும் நீண்ட உரைக்கு திரும்பிய பிரதமர் மோடி
Published on
Updated on
1 min read

72-ஆவது சுதந்திர தின விழாவில் சுதந்திர தின உரையை பிரதமர் மோடி புதன்கிழமை 80 நிமிடங்களுக்கு ஆற்றினார். 

72-ஆவது ஆண்டு சுதந்திர தினம் நாடு முழுவதும் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி தில்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரை ஆற்றினார். மோடி பிரதமராக பங்கேற்ற பிறகு அவர் ஆற்றும் 5-ஆவது உரை இதுவாகும். மக்களவை தேர்தலுக்கு முன்பாக ஆற்றும் இந்த சுதந்திர தின உரையை பிரதமர் மோடி 80 நிமிடங்களுக்கு ஆற்றினார். 

பிரதமர்கள் சுதந்திர தினத்தன்று எவ்வளவு நிமிடங்கள் உரையாற்றுகிறார்கள் என்பதும் ஒரு புள்ளி விவரமாக கவனிக்கப்பட்டு வரப்படுகிறது. 

2014-ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு ஆற்றிய முதல் சுதந்திர தின உரையை அவர் 65 நிமிடங்களுக்கு ஆற்றினார். 

2015-ஆம் ஆண்டில் 86 நிமிடங்களுக்கு சுதந்திர தின உரையை ஆற்றிய பிரதமர் மோடி, இந்திய வரலாற்றில் அதிக நேரம் உரையாற்றிய பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார். 1947-இல் நேரு 72 நிமிடங்கள் ஆற்றிய உரையே அதுவரை நீண்ட உரையாக இருந்தது.

அதற்கு அடுத்த ஆண்டில் (2016) மோடி நாட்டு மக்களுக்காக 96 நிமிடங்கள் என நீண்ட நெடிய உரையை ஆற்றினார். இதையடுத்து, சுதந்திர தினத்தன்று இந்த நீண்ட உரையை பிரதமர் மோடி குறைக்க வேண்டும் என பல தரப்பிடம் இருந்து கருத்துகள் எழுந்தன. 

இந்நிலையில், 2017-ஆம் ஆண்டு சுதந்திர தினத்துக்கு முந்தைய 'மன் கி பாத்' உரையில், "சுதந்திர தின உரை நீண்ட நேரம் நீடிப்பதால் அதன் அளவை குறைக்குமாறு பல கடிதங்கள் வந்தன. அதனால், சிறிய உரையை ஆற்றுவதாக" மோடி அப்போது உறுதியளித்தார். அதன்படி, அந்த ஆண்டின் சுதந்திர தின உரையை அவர் வெறும் 57 நிமிடங்களுக்கே ஆற்றினார். 

இந்நிலையில், தனது 5-ஆவது சுதந்திர தின உரையை மீண்டும் நீண்ட நெடியதாக ஆற்றியுள்ளார். இந்த உரையை அவர் 80 நிமிடங்களுக்கு ஆற்றினார்.   

மோடிக்கு முன் பிரதமராக 10 ஆண்டுகள் இருந்த மன்மோகன் சிங், சுதந்திர தின உரையை 50 நிமிடங்கள் என்ற கட்டுப்பாட்டுடன் உரையாற்றினார். 2005 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே மன்மோகன் சிங் 50 நிமிடங்களுக்கு மேல் உரையாற்றினார். மீதமுள்ள 8 ஆண்டுகளில் அவர் 32 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்களுக்குள் தனது சுதந்திர தின உரையை முடித்துக்கொண்டார். 

பாஜகவைச் சேர்ந்த வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, தனது சுதந்திர தின உரையை 30 முதல் 35 நிமிடங்களுக்குள்ளேயே ஆற்றி முடித்துக்கொள்வார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com