பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கும் விழாவுக்கு நல்லெண்ண தூதராகவே செல்வதாக இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமராக அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் சனிக்கிழமை பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழாவுக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சுனில் கவாஸ்கர் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை ஏற்று நாளை நடைபெறவிருக்கும் இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் நவ்ஜோத் சித்து பங்கேற்கிறார். இதற்காக வெள்ளிக்கிழமை பாகிஸ்தானுக்கு புறப்பட்ட சித்து அட்டாரி - வாகா எல்லையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள இந்த ஜனநாயகத்தின் மாற்ற தருணங்கள் மிகவும் முக்கியமானவை. நண்பனாக இம்ரான் கான் எனக்கு அழைப்பு விடுத்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். இது எனக்கு கௌரவான விஷயம். பாகிஸ்தானுக்கு நான் நல்லெண்ண தூதராகவே செல்கிறேன். இருநாட்டு உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்பில் நான் அங்கு செல்கிறேன்" என்றார்.