வாஜ்பாய்.. சரவண பவன் பில்ட்டர் காபி.. எட்டு ஊழியர்கள்: ஒரு சுவராஸ்ய கதை 

வாஜ்பாய்.. சரவண பவன் பில்ட்டர் காபி.. எட்டு ஊழியர்கள்: ஒரு சுவராஸ்ய கதை 

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தனது இல்லத்தில் நடந்த விருந்து ஒன்றில் தென் இந்திய உணவு வகைகளை விரும்பிச் சாப்பிட்டதோடு, ஊழியர்களிடமும் கனிவோடு நடந்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது
Published on

புது தில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தனது இல்லத்தில் நடந்த விருந்து ஒன்றில் தென் இந்திய உணவு வகைகளை விரும்பிச் சாப்பிட்டதோடு, ஊழியர்களிடமும் கனிவோடு நடந்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 'தென் இந்திய கல்விக் கழகம்' என்ற அமைப்பின் சார்பாக, 2006-ஆம் ஆண்டு 'எட்டாவது சந்திரசேகரேந்திர சரஸ்வதி தேசிய மாண்பமை மனிதர் விருது’ முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு வழங்கப்பட்டது. விழா மும்பையில் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் அப்போது வாஜ்பாயியின் உடல்நிலை சரியாக இல்லாத காரணத்தால், விழாவினை தில்லியில் உள்ள தனது இல்லத்தில் நடத்துமாறு, குறிப்பிட்ட கழகத்தின் செயலாளர் ஷங்கரிடம் கோரிக்கை வைத்தார். அத்துடன் ஷங்கர் ஆச்சர்யப்படும் விதமாக, விழா நடைபெறும் நாளன்று மாலை சுவைமிகு தென் இந்திய உணவு வகைகளுடன் கூடிய விருந்துக்கு ஏற்பாடு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

பொதுவாக உணவு வகைகளை ரசித்துச் சாப்பிடுவரான வாஜ்பாயியின் கோரிக்கையை சிறப்பாக நிறைவேற்றும் பொருட்டு, ஷங்கர் தில்லியின் கன்னாட் ப்ளேஸ் பகுதியில் உள்ள சரவண பவன் ஹோட்டலை அணுகினார். அதன்படி நிகழ்வின் பொழுது உணவு வகைகள் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு, மிகவும் சிறப்பாக நிகழ்வு நடைபெற்றது.

அப்பொழுது நடந்த விஷயங்களைப் பற்றி ஷங்கர் கூறுவதாவது;

அன்று  பரிமாறப்பட்ட உணவு வகைகளை அவர் மிகவும் ரசித்துச் சாப்பிட்டார். இன்னும் சொல்லப்போனால் , அவர் வழக்கமாகச் சாப்பிடும் அளவை விட கொஞ்சம் கூடுதலாகவே சாப்பிட்டார்.

அது மட்டும் அல்ல இத்தனை சுவையான தென் இந்திய உணவு வகைகள் தில்லியின் மத்தியப் பகுதியில் கிடைப்பது தனக்குத் தெரியாது என்றும் ஆச்சர்யத்தினை வெளிப்படுத்தினார். பின்னர் இந்த உணவு வகைகளை பரிமாறுவதற்காக எத்தனை ஊழியர்கள் வந்துள்ளார்களென்று கேட்டறிந்தார்.

பின்னர் அங்கு வந்திருந்த எட்டு ஊழியர்களுடன் சேர்ந்து வீட்டின் புல்வெளியில் ஒன்றாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் ஒவ்வொருவருடன் தனியாகவும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதனையடுத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் தான் கையொப்பமிட்ட 100 ரூபாய்த் தாளையும் பரிசளித்தார். 

பின்னர் இறுதியாக அவர்கள் கிளம்பும் முன் சிரிப்புடன் , 'எனக்கு இன்னொரு கப் தென் இந்திய பில்ட்டர் காபி கொடுங்க;' என்று கேட்டு வாங்கி சாப்பிட்டார்.

இவ்வாறு சங்கர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com