ஒரு பக்கம் லாரிகளில் நிவாரணப் பொருட்கள்; மறுபக்கம் கோழிக் கழிவுகளோடு தமிழகம் வரும் லாரிகள்

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேறெந்த மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் இருந்து மிகப்பெரிய அளவில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
ஒரு பக்கம் லாரிகளில் நிவாரணப் பொருட்கள்; மறுபக்கம் கோழிக் கழிவுகளோடு தமிழகம் வரும் லாரிகள்
Updated on
2 min read


கேரள மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேறெந்த மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் இருந்து மிகப்பெரிய அளவில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

ஊடகங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகங்கள் என பல தரப்பில் இருந்தும் கோடிக்கணக்கான நிவாரணப் பொருட்கள் லாரிகள் மூலம் கேரள மாநிலத்தின் பல மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு கோழிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி சோதனைச் சாவடியில் இன்று காலை பிடிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் சோதனைச் சாவடியில் லாரி ஒன்றை சோதித்த காவல்துறையினர் அதில் கோழிக் கழிவுகள் இருப்பதை அறிந்து லாரியைப் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் தில்லைராஜன் மற்றும் க்ளீனர் மாசானம் ஆகியோரையும் கைது செய்தனர்.

ஒரு பக்கம் லாரிகளில் நிவாரணப் பொருட்கள் சென்று கொண்டிருக்கும் போதே மறுபக்கத்தில் கோழிக் கழிவுகளை அனுப்பும் கேரள மாநிலம், தமிழகம் ஒன்றும் குப்பைத் தொட்டியல்ல.. அள்ளக் அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கைமாறு எதையும் எதிர்பாராமல் தங்களது தோழர்களுக்கு ஒரு இன்னல் நேரும் போது எண்ணற்ற வேறுபாடுகள் இருந்தாலும் அவை அனைத்தையும் மறந்து தோளோடு தோள் கொடுத்த தமிழகச் சகோதரர்களுக்கு கோழிக் கழிவுகளை பரிசளிக்கும் கேரள அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

கோழிக் கழிவுகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய மாநில அரசு முன் வர வேண்டும். எத்தனை லாரிகளைத்தான் தமிழகத்தால் பிடித்து வைக்க முடியும். கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டும் முறையைத் தடுக்க கேரள அரசு முன்வந்தால் மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

தமிழகத்துக்கு சொட்டு தண்ணீரைக் கொடுக்காத, நம்மை மனிதர்களாகக் கூட மதிக்காத, கோழிக் கழிவுகளைக் கொட்டும் கேரளாவுக்கு ஏன் நிவாரணப் பொருட்களை அனுப்புகிறீர்கள் என்று சமூக வலைத்தளங்களில் ஏராளமான செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அது எல்லாம் தமிழகர்களுக்கு பெரியதாக தெரியவில்லை. இந்த சமயம் நமது சகோதரர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வளவே.. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது தமிழர்களுக்கு மிகச் சரியாகவே பொருந்துகிறது.

அங்காளிகளும், பங்காளிகளும் அடித்துக் கொள்வார்கள். ஆனால் வெளியில் இருந்து ஒரு பிரச்னை என்றால் எல்லோரும் ஒன்றாக சேர்ந்துக் கொள்வார்கள். அதுபோலவே எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கேரளாவுக்கு ஒரு பிரச்னை என்றதும், உணவு பொருட்கள் போதுமான அளவுக்கு இருக்கிறது, வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எனவே, இந்த தருணத்தில் கூட கழிவுகளை வழக்கம் போல தமிழகத்தில் கொட்டிக் கொண்டிருக்காமல் உங்கள் சகோதரர்கள் வாழும் பூமியும் இறைவன் வாழும் பூமிதான் என்பதை உணரும் தருணம் இது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com