தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேக்கேதாட்டு அணை கட்ட முடியாது: நிதின் கட்கரி 

தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசால் முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 
தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேக்கேதாட்டு அணை கட்ட முடியாது: நிதின் கட்கரி 


தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசால் முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

காவிரியிலிருந்து பல கன அடி தண்ணீர் கடலில் வீணாகக் கலக்கிறது. வீணாகும் நீரை அணை கட்டி தேக்கி வைப்பதன் மூலம் கர்நாடகம் மட்டுமின்றி, தமிழகமும் பயனடைய முடியும் என்று கூறும் கர்நாடக அரசு, ரூ. 5,912 கோடி மதிப்பீட்டில் மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கான அறிக்கை தயாரித்துள்ளது. இந்த மேக்கேதாட்டு அணை மூலம் 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மேக்கேதாட்டுவில் அணைக் கட்ட சாத்தியக்கூறு உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே, காவிரியில் உரிய நீரை வழங்க மறுத்து வரும் கர்நாடகாவுடன் தமிழகத்திற்கு பிரச்னை உள்ள நிலையில், மேக்கேதாட்டு அணைக் கட்ட, தமிழக விவசாயிகள் மற்றும் மக்கள் தொடர் போராட்டங்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்திடமோ, காவிரி நதிநீர் வடிநிலப் பகுதிகளைச் சேர்ந்த பிற மாநிலங்களிடமோ உரிய அனுமதியையோ அல்லது தகவலையோ தெரிவிக்காமல்,  காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை நடைமுறைப்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமும் மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக எந்தத் தகவலையும் கர்நாடக அரசு தெரிவிக்கவில்லை.

காவிரி வடிநிலப் பகுதிகளில் ஏதாவது கட்டுமானங்களையோ அல்லது அந்த கட்டுமானத்துக்கான விரிவான திட்ட அறிக்கையையோ தயாரிப்பது என்பது காவிரி நதிநீர் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானது. எனவே, மேக்கேதாட்டு அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது. 

இதனிடையே நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் தமிழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், மேக்கேதாட்டு அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அறிக்கைக்கு காவிரி மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசால் முடியாது என மத்திய நீர்வள அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.  

மேலும், மேக்கேதாட்டு அணை தொடர்பாக தம்பிதுரை மற்றும் கனிமொழிக்கு மத்திய நிதின் கட்கரி கடிதம் எழுதி உள்ளதுடன், அதிமுக, திமுக கட்சி தலைவர்களுக்கும், எம்பிக்களுக்கும் பேச்சுவார்த்தைக்கு வருமாறும் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com