/

ஆந்திரம்: பாஜக எம்எல்ஏ ராஜிநாமா: சந்திரபாபு நாயுடுக்கு கடிதம் அனுப்பினார்

ஆந்திரத்தில் பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ மாணிக்யாலா ராவ் செவ்வாய்க்கிழமை தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்தார். தமது ராஜிநாமா கடிதத்தை ஆந்திர

Updated On :26 டிசம்பர் 2018, 12:58 am IST


ஆந்திரத்தில் பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ மாணிக்யாலா ராவ் செவ்வாய்க்கிழமை தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்தார். தமது ராஜிநாமா கடிதத்தை ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு அவர் அனுப்பியுள்ளார்.
தெலுங்கு தேசம்-பாஜக இடையே கூட்டணி இருந்தபோது, ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் மாணிக்யாலா ராவ். மத்திய பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியதைத் தொடர்ந்து, தமது அமைச்சர் பதவியை மாணிக்யாலா ராவ் ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில், தனது எம்எல்ஏ பதவியை மாணிக்யாலா ராவ் செவ்வாய்க்கிழமை திடீரென ராஜிநாமா செய்தார். மேலும் தமது ராஜிநாமா கடிதத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அவர் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன். ஆதலால், எனது பதவியை ராஜிநாமா செய்து கடிதத்தை உங்களுக்கு அனுப்புகிறேன். இந்த கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவருக்கு பரிந்துரைக்கும்படி கேட்டு கொள்கிறேன். எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கிய பிறகாவது, எனது தொகுதியை மேம்படுத்துங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமராவதியில் செய்தியாளர்களுக்கு மாணிக்யாலா ராவ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மேற்கு கோதாவரி மாவட்டத்தை தெலுங்கு தேசம் அரசு புறக்கணித்து விட்டது. குறிப்பாக, எனது தொகுதியான தாடிபள்ளிகுடம் தொகுதியை புறக்கணிக்கிறது. கடந்த 3 மாதங்களாகவே, முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம், எனது தொகுதி தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தேன். ஆனால் அது நடக்கவில்லை.
எனது தொகுதியில் தெலுங்கு தேசத்துக்கு செல்வாக்கு கிடையாது. இதனாலேயே எனது தொகுதியை தெலுங்கு தேசம் அரசு புறக்கணிக்கிறது. இதனால் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதென முடிவெடுத்தேன். எனது பிரச்னைக்கு 15 நாள்களில் தீர்வு காணவில்லையெனில், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார் அவர்.
சந்திரபாபு நாயுடு பதில்: இந்நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் எம்எல்ஏ பதவியை மாணிக்யாலா ராவ் ராஜிநாமா செய்திருப்பதாக சந்திரபாபு நாயுடு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், போலாவரம் திட்டத்தில் மத்திய அரசின் தலையீட்டை கண்டித்து எம்எல்ஏ பதவியை அவர் ராஜிநாமா செய்திருந்தால், மகிழ்ச்சியடைந்திருப்பேன். மேற்கு கோதாவரி மாவட்டம்தான், தெலுங்கு தேசத்துக்கு 15 எம்எல்ஏக்களை தந்தது. அதனால் அந்த மாவட்டம், எனக்கு மிகவும் முக்கியமானதாகும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.