பிரபலமாகும் பக்கோடா வேலை: இன்றைய உலகில்  வேலைவாய்ப்பின் உண்மை நிலை என்ன?

கடந்த 20 நாட்களாக சமூக வலைத்தளங்கள் முதல் கிராமத்தில் பட்டிதொட்டி வரை பேசும் பொருளாக மாறிவிட்டது பக்கோடா வேலை.
பிரபலமாகும் பக்கோடா வேலை: இன்றைய உலகில்  வேலைவாய்ப்பின் உண்மை நிலை என்ன?

கடந்த 20 நாட்களாக சமூக வலைத்தளங்கள் முதல் கிராமத்தில் பட்டிதொட்டி வரை பேசும் பொருளாக மாறிவிட்டது பக்கோடா வேலை. ஜனவரி 19-ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் தொடர்ச்சியே இந்தப் பக்கோடா வேலைவாய்ப்பு விவாதப்பொருளாக மாறக் காரணம்.

“உங்கள் அலுவலகம் முன் 'பக்கோடா’ கடை ஒன்றை யாராவது திறந்துவிட்டால், அது வேலை செய்வதைக் குறிக்கவில்லையா? ஒரு நாளைக்கு அவர் 200 ரூபாய் சம்பளத்தைத் தன்னுடைய கணக்கில் பெறுகிறார். மிகப்பெரிய அளவில் மக்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பதே உண்மை.” என்று வேலைவாய்ப்பு பற்றி பிரதமர் பேட்டியளித்தார். பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் அருண் ஜேட்லி, அமித் ஷா, தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் பிரதமரின் இந்தக் கருத்தை ஆதரித்துப் பேசி வருகின்றனர். ஆளும் கட்சி தலைவர்களின் இந்தக் கருத்தை, வழக்கம்போல சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கிவிட்டனர்.

இன்று இந்தியாவில் மட்டுமல்ல; உலகம் முழுவதுமே பொருளாதாரம் நல்ல நிலைமையில் இல்லை என்பதே நிதர்சனம். ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு வேலைவாய்ப்பு முக்கியப் பங்காற்றுகிறது. கடந்த சில வருடங்களாக வேலை வாய்ப்பின்மை பல்வேறு இடர்பாடுகளைக் குடும்பங்களிலும், சமூகத்திலும் ஏற்படுத்தி வருகிறது. இது நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது. இந்த வேலைவாய்ப்பின்மைக்கு கல்வி முறையில் உள்ள குறைபாடுகள், மாணவர்களின் மத்தியில் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள், மக்கள்தொகை வளர்ச்சி உள்ளிட்டவை பெரும் காரணிகளாகப் பார்க்கப்படுகின்றது. 

இந்தியா போன்ற மிகப்பெரிய அளவில் மக்கள்தொகை உள்ள நாடுகளில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வேலை வழங்குவது மிகக்கடினமான காரியம்தான். ஆனால் சிலர் மட்டுமே தான் படித்தத் துறையில் வேலை பெறுவதும், மற்ற பெரும்பாலானோர் வேலை இல்லாமலும் அல்லது தான் படித்த துறை சாராத வேலையில் அமர்வதும், குறைந்த ஊதியம் பெறுவதும் இன்று இயல்பான நிகழ்வாக மாறிவிட்டது. இதை இயற்கையாக நடந்த நிகழ்வாகப் பார்க்க முடியாது. செயற்கையாக நம்மால் உருவாக்கப்பட்ட ஒன்று என்பதே மறுக்கமுடியாத உண்மை. 

மருத்துவம், பொறியியல், விவசாயம், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல படிப்புகள் நம் நாட்டில் பிரபலம். இதில் மருத்துவம் தவிர மற்ற படிப்புகளை கடந்த சில ஆண்டுகளில் முடித்தவர்களுக்கு அவரவர் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகளவில் கிடைக்க வில்லை என்பதே எதார்த்தம். ஆனால் பொறியியல் படிப்பு முடித்தவர்களுக்கு மட்டும் வேலை கிட்டவில்லை என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்ற சித்தரிப்புகள் நிலைமையை இன்னும் சீரழிக்கும் என்பதை மறந்து நாம் ஒவ்வொரு நிகழ்வையும் கடந்து வருகின்றோம். 

சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, இந்தியாவில் 77 சதவீத வீடுகளில் நிரந்தரமான ஊதியம் இல்லை. மொத்த வேலையின்மை விகிதம் சதவீதமாக 5.1% ஆக இருக்கிறது. கிராமப்புறத்தில் வேலையின்மை விகிதம் 4.3 சதவீதமும், நகர்ப்புறத்தில் 6.5 சதவீதமாகவும் இருக்கிறது. ஆண்களுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை பெண்களிடம் கணிசமாக அதிகமாகக் காணப்படுகிறது. 

வேலையின்மை சதவீதம் அதிகமாக உள்ள மாநிலங்கள்:

வேலையின்மை சதவீதம் குறைவாக  உள்ள மாநிலங்கள்:

இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் வேலையின்மை - 4%, மேற்கு வங்கம் - 8.7%, ராஜஸ்தான் - 6.2% , ஆந்திர பிரதேசம் - 6.0% சதவீதமாகவும் இருப்பது கவனிக்கத்தக்கது. 

இளைஞர்களுக்குப் பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. உண்மையில் நம்மைச் சுற்றிலும் பல வருமானம் தரும் வேலைகள் உள்ளன. ஆனால் அவை தொழில்களாக அல்லாமல் வெறும் வேலைகளாக மட்டுமே உள்ளன. நாம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை மட்டுமே தொழில் நிறுவனங்களாகக் கருதுகிறோம். சுய தொழில் தொடங்க தக்க சூழ்நிலையை ஏற்படுத்துவதும், அதைச் சமூகமும் அரசாங்கமும் அங்கீகரிப்பதும் வேலையின்மை பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டுவரும். 

குறைவான வேலைவாய்ப்புக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் தன்னலம் மற்றும் தற்காலிக தேவைகளை மட்டுமே முன்னிறுத்தி செயல்படும் மக்களாகிய நாமும் அரசியல்வாதிகளுமே காரணம் என்பதை உணர்ந்து செயல்படுவதே மாற்றத்திற்கான தொடக்கமாக அமையும். சமூக நலத்தைக் கருத்தில் கொண்டு செயல்படும் சிறந்த ஆசிரியர்களையும், சமூக ஆர்வலர்களையும், நல்ல அரசியல் தலைவர்களையும் தயார் செய்வதே வேலையின்மைக்கான நிரந்தரத் தீர்வாக அமையும்.

Statistics References:
https://unemploymentinindia.cmie.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com