பயங்கரவாதிகளின் தாக்குதல் சதி முறியடிப்பு: துப்பாக்கிச் சண்டையில் வீரர் ஒருவர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள சி.ஆர்.பி.எஃப். முகாம் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளின் சதித் திட்டத்தை பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்தனர்.
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள சி.ஆர்.பி.எஃப். முகாம் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளின் சதித் திட்டத்தை பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்தனர்.
அந்த முகாம் மீது தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், சி.ஆர்.பி.எஃப். வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி நவீத் ஜட் என்பவரை போலீஸாரின் காவலில் இருந்து பயங்கரவாதிகள் கடந்த 6ஆம் தேதி தாக்குதல் நடத்தி, மீட்டுச் சென்றனர். இந்தத் தாக்குதலில் இரண்டு போலீஸார் கொல்லப்பட்டனர். அந்த மருத்துவமனைக்கு மிகவும் அருகே சி.ஆர்.பி.எஃப். படைப்பிரிவுக்குச் சொந்தமான முகாம் ஒன்று அமைந்துள்ளது. இந்த முகாமுக்குள் திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் பயங்கரவாதிகள் 2 பேர் ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்றனர். 
இதை அந்த முகாமின் நுழைவு வாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எஃப். வீரர் கண்டுபிடித்தார். அத்துடன் பயங்கரவாதிகள் மேலும் முன்னேறாதபடி தடுத்து நிறுத்தும் திட்டத்துடன், அவர்களை நோக்கி அவர் துப்பாக்கியால் சுட்டார். இதனால் அவருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் பலத்த காயமடைந்த அந்த வீரர், சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதைத் தொடர்ந்து, 2 பயங்கரவாதிகளும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். பின்னர் கரண்நகர் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த வீடு ஒன்றிற்குள் சென்று பயங்கரவாதிகள் புகுந்து கொண்டனர். அந்த வீட்டை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து உள்ளனர். அங்கு இருதரப்புக்கும் இடையே சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்வீசித் தாக்குதல்: கரண் நகர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள வீட்டை சுற்றிவளைத்து இருக்கும் பாதுகாப்புப் படையினர் மீது அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அவர்களை அங்கிருந்து பாதுகாப்புப் படையினர் விரட்டியடித்தனர்.
லஷ்கர் அமைப்பு பொறுப்பேற்பு: இதனிடையே, ஸ்ரீநகர் சி.ஆர்.பி.எஃப். முகாம் மீது தாக்குதல் நடத்த வந்தவர்கள், தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com