நீதியின் மீது நம்பிக்கை உள்ளது, நிச்சயம் மேல்முறையீடு செய்வோம்: லாலு மகன் சபதம்

இந்த பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்த்து நிச்சயம் மேல்முறையீடு செய்வோம் என்று லாலு மகன் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.
நீதியின் மீது நம்பிக்கை உள்ளது, நிச்சயம் மேல்முறையீடு செய்வோம்: லாலு மகன் சபதம்

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 2ஆவது வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 16 பேருக்கான தண்டனை விவரங்களை ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை (டிச.6) அறிவித்துள்ளது.

கடந்த 1996-ஆம் ஆண்டில், கால்நடைத் தீவனத் திட்டத்தில் ரூ.89.27 லட்சம் முறைகேடு செய்தது தொடர்பான 2-ஆவது வழக்கு மீதான விசாரணை முடிவடைந்ததையடுத்து, 

ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவ்பால் சிங் கடந்த டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி லாலு பிரசாத், ஜெகதீஷ் சர்மா (ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்) உள்ளிட்ட 16 பேரை குற்றவாளிகளாக அறிவித்து தீர்ப்பளித்தார். 

இதில், முக்கிய குற்றவாளியான பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதுகுறித்து லாலு பிரசாத் யாதவ் மகனும், பிகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:

இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு பயந்து லாலு பிரசாத் யாதவ் மண்டியிடுவார் என நினைத்த அனைவருக்கும் அவர் பயமறியாதவர் என்பது இப்போது தெரிந்திருக்கும். எந்த சூழ்நிலையிலும் லாலு தனது கொள்கையில் இருந்து விலகமாட்டார்.

இந்த தீர்ப்பு முழுக்க பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். இருப்பினும் நீதித்துறை அதன் கடமையைச் செய்துள்ளது. தீர்ப்பின் முழு விவரங்கள் அடங்கிய நகல் கிடைத்தவுடன் நாங்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

லாலுவுக்கு நிச்சயம் ஜாமீன் கிடைக்கும் என்று நாங்கள் அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஏனெனில் நீதியின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் நாங்கள் பயந்துவிடப்போவதில்லை என்றார்.

இந்நிலையில், கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் தண்டனை தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவரான கே.சி.தியாகி கூறியதாவது:

லாலுவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பை நாங்கள் முழுமனதாக வரவேற்கிறோம். இது பிகார் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயம் ஆகும். இதனால் ஊழலின் சாம்ராஜியம் முடிவுக்கு வந்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com