நீதிபதி லோயாவின் மரணம் இயற்கையானது; எங்களை துன்புறுத்தாதீர்கள்: மகன் அனுஜ் கோரிக்கை

சிபிஐ சிறப்பு நீதிபதியாக இருந்த பி.எச். லோயாவின் மரணம் இயற்கையானதுதான் என்று எனது குடும்பத்தார் ஏற்றுக் கொண்டதாக அவரது மகன் அனுஜ் கூறியுள்ளார்.
நீதிபதி லோயாவின் மரணம் இயற்கையானது; எங்களை துன்புறுத்தாதீர்கள்: மகன் அனுஜ் கோரிக்கை

மும்பை: சிபிஐ சிறப்பு நீதிபதியாக இருந்த பி.எச். லோயாவின் மரணம் இயற்கையானதுதான் என்று எனது குடும்பத்தார் ஏற்றுக் கொண்டதாக அவரது மகன் அனுஜ் கூறியுள்ளார்.

எனது தந்தை இயற்கை மரணம்தான் அடைந்தார் என்பதை என் குடும்பத்தார் ஏற்றுக் கொண்டனர். நானும் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராகிவிட்டேன். மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. அது இயற்கை மரணம்தான் என்று அனுஜ் லோயா கூறியுள்ளார்.

நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் இருப்பதால் சுதந்திரமான அமைப்பின் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர் பி.ஆர். லோன், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு குறித்து அனுஜிடம் கேட்டதற்கு, இந்த மனு குறித்து எந்த கருத்தையும் கூற நான் விரும்பவில்லை. இது பற்றி என்னிடம் யாரும் தெரிவிக்கவில்லை என்றார்.

முதலில் என் தந்தை குறித்து எங்களுக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் இப்போது அவரது மரணம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை. சில ஊடகச் செய்தி உள்ளிட்டவற்றால் எங்கள் குடும்பத்தினருக்கு பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. யார் மீதும் எந்தக் குற்றச்சாட்டையும் கூறவில்லை. உண்மையிலேயே நாங்கள் அதிகம் காயமுற்றுள்ளோம். இதில் இருந்து வெளியே வர விரும்புகிறோம்.

தயவு செய்து அனைவரிடமும் ஒரு விஷயத்தைக் கேட்டுக் கொள்கிறேன். யாரும் எங்களை துன்புறுத்தாதீர்கள், தொல்லை கொடுக்காதீர்கள். இதைத்தான் உங்களுக்குத் தெரிவிக்கி விரும்புகிறேன் என்றார்.

நீதிபதி பி.எச்.லோயா, கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி, தனது உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்கு நாகபுரிக்குச் சென்றபோது, அங்கு மாரடைப்பால் உயிரிழந்தார். இவர், சோராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்து வந்தவர்.

குஜராத் மாநிலத்தில் சோராபுதீன், அவரது மனைவி கெளசர் பாய், அவர்களின் கூட்டாளிகள் துளசிதாஸ் பிரஜாபதி ஆகியோர் கடந்த 2005-ஆம் ஆண்டு நம்பர் மாதம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் மூவரும், லஷ்கர் அமைப்பின் பயங்கரவாதிகள் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சோராபுதீன் உள்ளிட்டோர் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாகவும், அந்தச் சம்பவத்தில், காவல் துறை உயரதிகாரிகள், அப்போதைய மாநில அமைச்சராக இருந்த அமித் ஷா ஆகியோருக்குத் தொடர்பு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், நீதிபதி பி.எச்.லோயாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக, அவரது சகோதரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சந்தேகம் எழுப்பினார். அவரது மரணத்துக்கும், அவர் விசாரித்து வந்த சோராபுதீன் என்கவுன்ட்டர் வழக்குக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறினார்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் பி.ஆர்.லோன் மனு தாக்கல் செய்துள்ளார். இதேபோல், நீதிபதி பி.எச்.லோயாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தக் கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில் மும்பை வழக்குரைஞர்கள் சங்கத்தினர் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com