
கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்துள்ள ஹலசூரு என்ற இடத்தில் இருந்து 16 பேர் கொண்ட ஐயப்பன் பக்தர்கள் சபரிமலைக்கு பாதயாத்திரையாக டிசம்பர் 17, 2017 அன்று புறப்பட்டனர்.
இக்குழு கோரமங்கலா, எலக்ட்ரானிக்ஸ் சிட்டி வழியாக ஓசூரை அடைந்தது. அந்த குழுவில் இருந்த மதன் குமார் என்பவருடன் அவ்விடத்தில் உள்ள நாய் ஒன்று அன்போடு பழகிவிட்டது. இந்த காரணத்தால் ஐயப்பன் பக்தர்கள் குழுவுடனே அந்த நாயும் பாதயாத்திரையாக பயணிக்கத் தொடங்கியது.
தங்களுடன் நெருங்கிப் பழகிய அந்த நாய்க்கு அவர்கள் 'பைரவா' என்று பெயரிட்டனர். இதனிடையே டிசம்பர் 29-ந் தேதி திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி என்ற இடத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி மதன்குமார் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர்கள் இரு குழுக்களாக பிரிந்தனர். ஒரு பிரிவினர் மதன்குமாருடன் மருத்துவமனையில் உடனிருந்தனர். மற்றவர் சபரிமலை பாதயாத்திரையை தொடர்ந்தனர். இதில், பைரவாவும் அவர்களுடனேயே மருத்துவமனையில் தங்கி விட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக மதன்குமார் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
அப்போது, மருத்துவமனையில் இருந்த குழுவினரை விட்டு பைரவா பிரிந்து சென்று விட்டது. இவர்களும் மதன்குமார் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்த பிறகு சபரிமலைக்கு தங்கள் பாதயாத்திரையை தொடர்ந்தனர்.
இந்நிலையில், முன்னர் சென்ற குழுவினருடன் பைரவா சுமார் 490 கிலோ மீட்டர் தூரம் பயணித்துச் சென்றடைந்தது. அவர்களுடனேயே சிறப்பு அனுமதி பெற்று ஐயப்பனையும் தரிசித்தது. இதற்கிடையில் அக்குழுவினருடன் வெறும் பால் மற்றும் தண்ணீர் மட்டுமே பைரவா எடுத்துக்கொண்டுள்ளது.
இதனிடையே மற்றொரு குழுவினரும் சபரிமலை தரிசனம் முடித்துக்கொண்டு, ரயில் நிலையத்துக்கு வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு முன்பாகவே பைராவும் அங்கு வந்து சேர்ந்துள்ளது. மேலும் அவர்களின் வரவுக்காக காத்திருந்துள்ளது.
இதையடுத்து, அந்த குழுவில் இருந்த முருகன் என்பவர் பைரவாவை தன்னுடன் அழைத்துச் செல்ல திட்டமிட்டார். எனவே, டிடிஆரிடம் அவர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பைரவா பயணம் செய்ய சிறப்பு அனுமதியை வழங்கினார்.
தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் முருகனுக்கு தனி வீடு உள்ளது. இந்த பயணத்தின் காரணமாக மிகவும் சோர்வடைந்து காணப்பட்ட பைரவாவை விலங்குகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அதற்கு போதிய சிகிச்சைகளை வழங்கி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.