
இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், பிரபல நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள 'பத்மாவத்' திரைப்படத்தில், ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதியின் வரலாறு தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு தடைகளைக் கடந்து, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் அந்த திரைப்படம் நாடு முழுவதும் வியாழக்கிழமை (ஜன.25) வெளியானது.
'பத்மாவத்' திரைப்படத்துக்கு எதிராக, கர்னி சேனை உள்பட பல்வேறு ராஜபுத்திர அமைப்புகளின் சார்பில் வட மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. பேருந்து, இருசக்கர வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். மேலும் பள்ளி வாகனம் மீது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின.
இதனால் பெரும்பாலான வட மாநிலங்களில் இப்படம் திரையிடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த திரைப்படத்தை திரையிட மாட்டோம் என்று மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பத்மாவத் திரைப்படம் வெளியான திரையரங்குகளில் அப்பகுதி காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடகத்தின் பெல்காம் மாவடத்தில் உள்ள பிரகாஷ் திரையரங்களில் பத்மாவத் திரைப்படம் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அப்போது அந்த திரையரங்கு வெளியே மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
இதனால் அங்கிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. இதுகுறித்து அப்பகுதி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.