
ஹைதராபாத்: சர்வதேச மாநாடு ஒன்றுக்காக வெளிநாடு சென்றிருந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, விமானம் சரியான நேரத்திற்கு கிடைக்காத காரணத்தால், வெள்ளியன்று நடைபெற்ற குடியரசு தின நிகழ்வில் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார். இந்நிலையில் நாட்டின் 69-ஆவது குடியரசு தின விழா, ஹைதராபாத் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தில் வெள்ளியன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சந்திரபாபு சுவிட்சர்லாந்தில் இருந்து அபுதாபி வழியாக விஜயவாடாவுக்கு வந்து அங்கிருந்து ஹைதராபாத்துக்கு வருவதாக இருந்தது. ஆனால் அபுதாபியில் நிலவிய கடும் பனிமூட்டத்தால் அவர் பயணம் செய்த விமானம் மிகவும் தாமதமாக புறப்பட்டது.
இதனால், விஜயவாடாவுக்கு அவர் வர வேண்டிய நேரத்தினை விட 9 மணி நேரம் தாமதமாக வருகிறார். இதன் காரணமாக அவரால் குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.
அதேசமயம் இந்திரா காந்தி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு தின விழாவில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களின் ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் கலந்து கொண்டு, தேசியக் கொடியினை ஏற்றி, நிகழ்வைச் சிறப்பித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.