கர்நாடகாவில் தமிழர்கள் தமிழில் பேசக் கூடாதா? ஒலிபெருக்கியில் தமிழில் அறிவிப்பு செய்ததால் ஏற்பட்ட சர்ச்சை! (விடியோ) 

ஒலிபெருக்கியில் தமிழில் அறிவித்த சென்ற சங்க உறுப்பினர் ஒருவரை அப்பகுதி கன்னட மக்கள் சிலர் வழிமறித்து கர்நாடகாவில் தமிழில் பேசக்கூடாது, கன்னடத்தில் தான் பேச வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர்.
கர்நாடகாவில் தமிழர்கள் தமிழில் பேசக் கூடாதா? ஒலிபெருக்கியில் தமிழில் அறிவிப்பு செய்ததால் ஏற்பட்ட சர்ச்சை! (விடியோ) 

பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 9-ஆம் ஆண்டு திருவள்ளுவர் நாள் விழா பற்றிய அறிவிப்பை ஒலிபெருக்கியில் தமிழில் அறிவித்த சென்ற சங்க உறுப்பினர் ஒருவரை அப்பகுதி கன்னட மக்கள் சிலர் வழிமறித்து கர்நாடகாவில் தமிழில் பேசக்கூடாது, கன்னடத்தில் தான் பேச வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையில் பெரும் வாக்குவாதம் மூண்டதை அருகில் இருந்த ஒருவர் தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ள அந்த விடியோ காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

தமிழர்கள் அதிகம் வசிகம் மாநிலங்களில் ஒன்று கர்நாடகா, அதன் தலை நகரான பெங்களூருவில் அமைந்திருக்கும் ‘பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்’ கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி திருவள்ளுவர் நாள் விழாவைக் கொண்டாடும் விதமாகத் தமிழர்-கன்னடர் ஒற்றுமைப் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவிற்கு கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, அமைச்சர்கள், மேயர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு பேரணியைத் தொடங்கி வைத்தனர்.  

இந்தப் பேரணி பற்றிய அறிவிப்பை வெளியிட்டு கர்நாடகா வாழ் தமிழர்கள் மற்றும் கன்னடர்களை பேரணிக்கு அழைக்கும் விதமாகத் தமிழ் சங்க உறுப்பினர் ஒருவர் ஆட்டொவில் அமர்ந்த வாரு ஒலிபெருக்கியில் தமிழில் அறிவித்துச் சென்றுள்ளார். அப்போது ஆட்டோவை வழிமறித்த ஒருவர் “கர்நாடகாவில் தமிழில் என்ன சொல்லி கொண்டிருக்கிறாய், முதலில் இதற்கு நீ அனுமதி வாங்கினாயா? அனுமதிச் சீட்டை காட்டு என்று!”  என்று கன்னடத்தில் மிரட்டும் தொனியில் கேட்டு அனுமதிச் சீட்டை வாங்கிப் படித்து பார்க்கிறார்.

பின்னர் கர்நாடகாவில் ஏன் தமிழில் அறிவிப்பு செய்கிறாய், கன்னடத்தில் சொல்லு என்று வற்புறுத்தியுள்ளார். அப்போது அந்தத் தமிழ் சங்க உறுப்பினர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார், பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த கன்னட பெண்கள் சிலரும் அவரிடம் தமிழில் பேசியதற்குக் கேள்வி எழுப்பிச் சண்டையிடும் பாணியில் பேசியதில் வாக்குவாதம் முற்றுகிறது. ஆட்டோவில் இருந்து சாவியை கைப்பற்றி அவரை அங்கேயே நிறுத்தி வைக்கிறார்கள், பின்னர் அங்கு வந்த காவலர்கள் இருவரிடமும் பேசி அனுமதிச் சீட்டை சரிபார்த்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். 

இதற்கு அவர்கள் காரணம் என்னவென்றால் “எங்களுக்குத் தமிழ் தெரியாது, கன்னடத்தில் அறிவித்தால் நாங்களும் கலந்து கொள்வோம் அல்லவா அதனால் தான் அவரைக் கன்னடத்தில் பேசச் சொன்னோம்” என்கிறார்கள்.

இது குறித்து பெங்களூர்த் தமிழ் சங்கத்தின் தலைவர் தாமோதிரனிடம் கேட்டதற்கு “இதுபோன்ற சர்ச்சைகள் எங்களுக்குப் புதிதல்ல, அடிக்கடி இது மாதிரியான பிரச்னைகளை நாங்கள் சந்தித்து தான் வருகிறோம். இவர்கள் ஆங்காங்கே இருக்கும் சிறு சிறு கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள், மொழிப்பற்று, மொழியை வளர்க்கிறோம் என்கிற பெயரில் இப்படிச் செய்கிறார்கள், ஆனால் கன்னட சாகித்திய பரீக்ஷித், கன்னட மற்றும் பண்பாட்டு துறை ஆகியோர் எப்போதும் எங்களுக்கும் தமிழுக்கும் முன்னுரிமை கொடுத்து தான் வருகிறார்கள்” என்று பதிலளித்தார். 

அந்தச் சம்பவத்தின் போது பதிவு செய்யப்பட்ட விடியோ கீழே:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com