புராரி மரணம்: காப்பாற்றப்படுவோம் என்று நினைத்தே தூக்கில் தொங்கினார்களா?

நாட்டையே உலுக்கிய புராரி மரணம் தொடர்பாக இன்னும் பல முடிச்சுகள் காவல்துறைக்கு சவாலாக இருக்கும் நிலையில், குடும்ப உறுப்பினர் கடந்த 11 ஆண்டுகளாக எழுதிவந்த 11 டைரிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
புராரி மரணம்: காப்பாற்றப்படுவோம் என்று நினைத்தே தூக்கில் தொங்கினார்களா?
Updated on
2 min read

புது தில்லி: நாட்டையே உலுக்கிய புராரி மரணம் தொடர்பாக இன்னும் பல முடிச்சுகள் காவல்துறைக்கு சவாலாக இருக்கும் நிலையில், குடும்ப உறுப்பினர் கடந்த 11 ஆண்டுகளாக எழுதிவந்த 11 டைரிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த டைரியில் இருக்கும் சில விஷயங்கள், இந்த தற்கொலையோடு ஒத்துப்போவதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது. 11 பேரும், காப்பாற்றப்படுவோம் என்ற மூட நம்பிக்கையிலேயே தூக்கில் தொங்கியுள்ளனர் என்று டைரி மூலம் தெரிய வந்துள்ளது.

அந்த டைரியில், "ஒரு கிண்ணத்தில் தண்ணீரை வைக்க வேண்டும். அதன் நிறம் எப்போது மாறுகிறதோ அப்போது நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்" என்று எழுதப்பட்டுள்ளது. எனவே, தற்கொலை செய்து கொண்டவர்கள் அனைவரும், தாங்கள் காப்பாற்றப்படுவோம் என்று நினைத்தே தூக்கில் தொங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அந்த டைரியில் "பூமி குலுங்கும்", "வானத்தில் இடியோசை கேட்கும்", பிறகு அனைவரும் காப்பாற்றப்படுவீர்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது.

அதாவது, இந்த டைரியை எழுதியவர் தொடர்ந்து 11 ஆண்டுகள் டைரி எழுதி வந்துள்ளார். இந்த டைரிக்கும், மரணச் சம்பவங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், அதில் கூறப்பட்டிருக்கும் சில விஷயங்கள் இந்த மரணங்களோடு ஒத்துப்போகின்றன என்று காவல்துறை கூறுகிறது.

மேலும் இந்த வழக்கில் மிகப்பெரிய திருப்பமாக, அவர்களது வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தபோது மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தள்ளது.

அதாவது, தற்கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட நாற்காலிகள், கயிறுகள் போன்றவற்றை குடும்ப உறுப்பினர்கள் ஒரு சில நாட்களுக்கு முன்பே வாங்கி வரும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.

அதாவது, மரணம் அடைந்த சவீதா தனது மகள் நீதுவுடன் சென்று 5 நாற்காலிகளை வாங்கி வரும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த 5 நாற்காலிகளும் மரணித்தவர்கள் தூக்கில் தொங்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

இரவு 10.15 மணியளவில் துருவ் மற்றும் ஷிவன் ஆகியோர் மின்சார ஒயர்களை வாங்கி வரும் காட்சியும் பதிவாகியுள்ளது. இந்த ஒயர்களைப் பயன்படுத்தியே 10 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி: வடக்கு தில்லியில் உள்ள புராரியை அடுத்த சந்த் நகரில் ஒரே குடும்பத்தில் 7 பெண்கள் உள்பட 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் துறை கூடுதல் துணை ஆணையர் வினித் குமார்செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: புராரியை அடுத்த சந்த் நகர் இரண்டாவது தெருவில் உள்ள குடியிருப்பின் முதலாவது மாடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் வசித்து வந்தனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக புராரி காவல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது.

அங்கு விரைந்து சென்ற போலீஸார் 4 ஆண்கள், 6 பெண்கள் உள்ளிட்டோர் தூக்கிட்ட நிலையில் இருப்பதையும், வயதான பெண்மணி ஒருவர் பக்கத்து அறையில் படுத்த நிலையில் இறந்து கிடந்ததையும் கண்டறிந்தனர்.

அவர்கள் நாராயண் தேவி (77), அவரது மகன்கள் புவனேஷ் (50, லலித் (45, மருமகள்கள் சவிதா (48, தீனா (42, நாராயண் தேவியின் மகள் பிரதீபா (57, பேரன், பேத்திகளான பிரியங்கா (33, நீத்து (25, மோனு (23, துருவ் (15, சிவம் (15) ஆகியோர் எனத் தெரிய வந்தது.

இதனிடையே, தில்லி காவல் துறையின் குற்றத் தடுப்புப் பிரிவினர், தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு அந்த வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சம்பவம் நடைபெற்ற வீட்டில் எவ்வித சூறையாடலோ, விலை மதிப்புமிக்க பொருள்களான செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை எனக் கண்டறியப்பட்டது. பெண் சடலங்களில் தங்க நகைகள் அப்படியே இருந்தன. வீட்டில் கையால் எழுதப்பட்ட சில குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டன.

ஆன்மிகம் அல்லது கடவுளின் மாயையை அறிய முற்படுவது தொடர்பாக அக்குடும்பம் பின்பற்றி வந்துள்ளது அந்தக் குறிப்புகளின் மூலம் தெரியவந்துள்ளது. அந்தக் குறிப்புகளுக்கும், இறந்தவர்களின் கைகளும், வாயும் டேப்பால் ஒட்டப்படிருந்ததற்கு ஆணித்தரமான தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டன. இந்த வழக்கு விசாரணை தில்லி காவல்துறையின் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com