
புது தில்லி: மக்களவையில் வெள்ளியன்று நடைபெற்று வரும் பிரதமர் நரேந்திர மோடி அரசின் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு படம் பற்றி பேசப்பட்டது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் வெள்ளியன்று காலை துவங்கியது. விவாதத்தை துவக்கி வைத்து தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பியான கல்லா ஜெயதேவ் பேசினார்.
இவர் மூத்த தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மருமகன். கிருஷ்ணாவின் மகனும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருமான மகேஷ் பாபுவின் மைத்துனர். தற்போதைய நாடாளுமன்றத்தின் பணக்கார எம்.பிக்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவர் 2014 நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது தனது சொத்து மதிப்பு ரூ. 683 கோடி என்று குறிப்பிட்டிருந்தார்.
இவர் தனது பேச்சின் துவக்கத்தில், தெலங்கானா மாநில உருவாக்கத்தின் பொழுது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக உறுதி கூறி, அதனை நிறைவேற்றாத பிரதமர் மோடி மீது குறை கூறினார். அதற்கு அவர் சமீபத்தில் வெளியாகி பெரு வெற்றி, தனது மைத்துனர் மகேஷ் பாபுவின் 'பரத் அன்னே நேனு' படத்திற்கு பற்றிக் குறிப்பிட்டார்.
இந்தப் படத்தில் மாநில முதல்வராக இருக்கும் தனது தந்தை திடீரென்று மரணமடைந்து விட வெளிநாட்டில் இருந்து திரும்புக்கும் இளம் தோழிலதிபரான மகேஷ் பாபு, அரசியலில் நுழைந்து முதல்வராகிறார். தனது செயல்களால் மக்கள் விரும்பும் முதல்வராகிறார். 'சத்தியத்தை காக்க இயலாதவன் மனிதனே இல்லை' என்ற தனது தாயாரின் சொல்படியே செயல்படுகிறார் மகேஷ் பாபு என்பதே படத்தின் கதை.
இதைக் குறிப்பிட்ட ஜெயதேவ் பேசியதாவது:
ஆரம்பத்தில் விருப்பமின்றி அரசியலில் நுழையும் பரத், பின்னர் இளமையான, செயல் துடிப்புள்ள மற்றும் அனைத்து மக்களாலும் விரும்பப்படும் முதல்வராகிறார்.
இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது ஏன் என்றால் அது பொதுமக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது. வெற்று உறுதிமொழிகளாலும் நிறைவேற்றப்படாத சத்தியங்களாலும் மக்கள் சோர்வடைந்து விட்டனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவலான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. சிலர் அவரது இந்த பேச்சு மைத்துனர் படத்திற்கான விளமபரம் என்றும், சிலர் இந்தியாவில் அரசியலும் சினிமாவும் பிண்ணிப் பிணைந்திருப்பதை இது காட்டுகிறது என்றும் விமர்சித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.