மக்களவைத் தேர்தல்: பிகாரில் நிதீஷ் அரசின் செயல்பாட்டை முன்னிறுத்தியே பிரசாரம்: ஐக்கிய ஜனதா தளம்

வரும் 2019ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், பிகாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசின் செயல்பாட்டை முன்னிறுத்தியே தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசாரம்
Updated on
1 min read

வரும் 2019ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், பிகாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசின் செயல்பாட்டை முன்னிறுத்தியே தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசாரம் செய்யும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது.
தில்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு இடையே தொகுதிகளை பங்கீடு செய்து கொள்வது குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பிகாரில் மக்களவைத் தேர்தலின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஐக்கிய ஜனதா தளமே தலைமை வகிக்கும் என்று அக்கட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதையடுத்து, பாஜகவும் தங்களது கட்சிதான் பிகாரில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் என்று திங்கள்கிழமை கூறியது. இதனால், பிகாரில் மக்களவைத் தேர்தலின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது என்பது குறித்து ஐக்கிய ஜனதா தளம்-பாஜக இடையே போட்டி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிகார் தலைநகர் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் அலோக் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மக்களவைத் தேர்தலின்போது தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடியை முன்னிறுத்தி, வாக்காளர்களிடம் வாக்குகள் கேட்கப்படலாம். ஆனால், பிகார் மாநிலத்தைப் பொறுத்தமட்டில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசின் செயல்பாட்டை முன்னிறுத்தியே தேசிய ஜனநாயகக் கூட்டணி வாக்குகளை சேகரிக்கும்.
பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிதான் பெரிய கட்சியாகும். மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளத்துக்குதான், கூட்டணியில் இருக்கும் பிற கட்சிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் உள்ளனர். கடந்த காலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்டபோது, எங்கள் கட்சிதான் அதிக இடங்களில் வெற்றி பெற்றது என்றார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் கூறியபோது, பிகாரில் கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது என்பதில் எந்த குழப்பமும் ஏற்படவில்லை என்றும், பிரதமர் மோடியின் தலைமையிலேயே தேர்தலை கூட்டணி கட்சிகள் சந்திக்கும் என்றும் குறிப்பிட்டார்.
முன்னதாக, கூட்டணிக்கு தலைமை வகிக்கும் விவகாரம் குறித்து பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதீஷ் குமாரிடம் செய்தியாளர்கள் திங்கள்கிழமை கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் நேரடியாக பதிலளிக்க மறுத்து விட்டார். அதேநேரத்தில், பாஜக மூத்த தலைவரும், பிகார் துணை முதல்வருமான சுஷில்குமார் மோடி திங்கள்கிழமை கூறியபோது, நிதீஷ் குமார், பிரதமர் மோடி ஆகியோரின் பெயர்களில் மக்களவைத் தேர்தலில் பிரசாரம் செய்யப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com