மாநிலங்கள் இடையே ஆளுநர்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்
மாநிலங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும், ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்த ஆளுநர்கள் முயற்சிக்க வேண்டும்' என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.


மாநிலங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும், ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்த ஆளுநர்கள் முயற்சிக்க வேண்டும்' என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் என்ற முறையில், கல்வியின் பல்வேறு தளங்களில் தரத்தை உயர்த்துவதற்கு பல்கலைக்கழகங்களை ஆளுநர்கள் ஊக்குவிக்க வேண்டும்' எனவும் மோடி கேட்டுக் கொண்டார். தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், மாநில ஆளுநர்கள் மாநாட்டின் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசியபோது, உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களாக உருவெடுப்பதை இந்திய பல்கலைக்கழகங்கள் இலக்காகக் கருத வேண்டும் என்றும், இதை முன்னெடுப்பதில் ஆளுநர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும்' என்றும் வலியுறுத்தினார். சாதாரண மனிதனின் வாழ்க்கை முறையை எளிதாக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருவதாக மோடி குறிப்பிட்டார். பொதுவாழ்க்கையில் தங்களுக்கு இருக்கும் விசாலமான அனுபவத்தைக் கொண்டு, மேற்கண்ட இலக்கை அடைவதில் மக்கள் அமைப்புகளையும், அரசுத் துறைகளையும் ஆளுநர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றார் மோடி.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், மாநிலங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும், ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்துவதற்கான புதிய வழிகளை ஆளுநர்கள் கண்டறிய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்' என்று கூறப்பட்டுள்ளது.
குடியரசுத்தலைவர் அழைப்பு: தூய்மை, கல்லாமையை ஒழிப்பது, நோய் தடுப்பு, ஊட்டச்சத்து திட்டங்கள் ஆகியவற்றை கிராமப்புற மக்களிடம் கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் மாணவர்கள் பங்கெடுக்க வேண்டும்' என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார். சமூக பொறுப்புணர்வை பல்கலைக்கழகங்களிடம் ஆளுநர்கள் வளர்த்தெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இதுதொடர்பாக, ஆளுநர்கள் மாநாட்டில் ராம்நாத் கோவிந்த் பேசியதாக குடியரசுத்தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பல்கலைக்கழக மாணவர்கள் அவ்வபோது கிராமங்களைச் சென்று பார்வையிட வேண்டும். தூய்மை, நோய் தடுப்பு, ஊட்டச்சத்து திட்டங்கள், கல்லாமை ஒழிப்பு போன்றவற்றை கிராம மக்களிடம் மாணவர்கள் கொண்டு செல்ல வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தை செம்மையாக செயல்படுத்தும் நோக்கில் துணை வேந்தர்களுடன் ஆளுநர்கள் ஆலோசனைகள் மேற்கொள்வது அவசியமானது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...