மத்திய அரசின் திட்டங்களை மாநில முதல்வர்கள்தான் முன்னெடுக்க வேண்டும்: நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு 

மத்திய அரசின் திட்டங்களை மாநில முதல்வர்கள்தான் முன்னெடுக்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களை மாநில முதல்வர்கள்தான் முன்னெடுக்க வேண்டும்: நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு 
Published on
Updated on
1 min read

புதுதில்லி: மத்திய அரசின் திட்டங்களை மாநில முதல்வர்கள்தான் முன்னெடுக்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதும், அதுவரை இருந்துவந்த மத்திய திட்டக்குழு என்னும் அமைப்பு கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ‘நிதி ஆயோக்’ அமைப்பு நிறுவப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும் துணைத் தலைவராக ராஜிவ் குமாரும் உள்ளனர்.

நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழுவின் 4-வது கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ஞாயிறன்று நடந்து வருகிறது. இதில், உறுப்பினர்களாக உள்ள அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், சில மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 2017-18-ம் நிதி ஆண்டின் கடைசி காலிறுதி வரை 7.7 சதவீதம் என்ற ஆரோக்கியமான நிலையில் இருந்து வருகிறது. இப்போது நமக்கு இருக்கும் முக்கிய சவால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்தில் உயர்த்துவதுதான். அதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நிதி ஆயோக்கின் நிர்வாகக்குழு, வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு மாற்றத்தை உண்டாக்கும். பருவமழை தீவிரமடைந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்குத் தேவையான அனைத்து நிதி உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்.

ஸ்வச் பாரத் இயக்கம், டிஜிட்டல் பரிமாற்றம், திறன் மேம்பாடு உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை மேலும் சிறப்பாகக் கொண்டு செல்ல மாநில முதல்வர்கள்தான் முன்னெடுக்க வேண்டும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்காக 1.50 லட்சம் சுகாதார மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. 10 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு திட்டம் கிடைக்கும். கல்விக்கான சமக்ர சிக்சா அபியானில் முழுமையான அணுகுமுறை அவசியம்.

மத்திய அரசின் பொருளாதாரம் சார்ந்த முத்ரா, ஜன் தன்யோஜனா, ஸ்டான்ட் அப் இந்தியா ஆகிய திட்டங்கள் மிகப்பெரிய அளவுக்கு நிதி உள்ளீடுகளைக் கொண்டுவரும். அதேசமயம் சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை இந்தத் திட்டங்கள் போக்கும். தற்பொழுது மாநிலங்களுக்கு நிதி வழங்குவது அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com