கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலால் 17 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வைரஸ் காய்ச்சல் குறிப்பாக வடகேரள பகுதியில் உள்ள கோழிகோட் மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் தான் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இந்த நிபா வைரஸ் பீதியில் இருந்து கேரள மக்கள் தற்போது மீண்டுள்ளனர். இதை கொண்டாடும் வகையில் இசைக்குழுவினர் சிலர் இணைந்து 'பை பை நிபா' (Bye Bye Nipah) என்று பாடலை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். இந்த 2 நிமிட பாடல் நிபா வைரஸுக்கு பிரிவு உபசரிப்பு விழா நடத்தும் வகையிலும், இந்த விவகாரத்தை மக்கள் எந்த அளவுக்கு தைரியமாக எதிர்கொண்டனர் என்பதையும் உணரவைக்கிறது.
இந்த பாடல் காட்சியில் புகழ்பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவமனையில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி மாவட்டத்தின் பிரதான இடங்களிலும் பதிவு செய்து காட்சியாக்கப்பட்டுள்ளது.
கடந்த 14-ஆம் தேதி வெளியான இந்த பாடல் சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி தற்போது மாநிலத்தின் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளது.
இந்த பாடலின் வரிகளை ஷாஜி குமார் எழுதியுள்ளார். அதற்கு சாய் பாலன் இசையமைத்து உள்ளார்.
திருமணம், திருவிழாக்கள், சினிமா, விடுமுறை போன்ற சீசன்களில் மட்டுமே பாடல்களை உருவாக்கி வெளியிட்டு வந்துள்ள நிலையில், தற்போது நிபா போன்ற துயரம் தீர்ந்த தருணத்தை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த பாடல் மக்கள் மத்தியில் வெற்றியை பெற்று ட்ரெண்ட் ஆகியுள்ளது.