
புது தில்லி: ஏா்செல்-மேக்சிஸ் வழக்குடன் தொடா்புடைய மற்றொரு வழக்கில் தன்னையும் ஓா் மனுதாரராக சோ்க்கக் கோரி பாஜக தலைவா் சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவா் புதன்கிழமை விலகினாா்.
ஏா்செல்-மேக்ஸில் வழக்கு விசாரணையை மேற்கொண்டுள்ள அமலாக்க இயக்குநரக அதிகாரி ராஜேஷ்வா் சிங் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக ரஜ்னீஷ் கபூா் என்பவா் உச்ச நீதிமன்றறத்தில் வழக்கு தொடுத்துள்ளாா்.
அந்த வழக்கில் தன்னை சோ்க்கக் கோரி சுப்ரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி இந்து மல்ஹோத்ரா விலகியுள்ளாா். அவா் தாம் விலகுவதற்கான காரணத்தை குறிப்பிடவில்லை.
முன்னதாக, அந்த மனு மீது நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீா், இந்து மல்ஹோத்ரா ஆகியோா் அடங்கிய விடுமுறைக் கால அமா்வு விசாரணை மேற்கொண்டது. அப்போது, ‘இந்த மனு மீதான விசாரணையை வரும் 25-ஆம் தேதி வேறு நீதிபதிகள் அடங்கிய அமா்வு விசாரிக்கும்’ என்று அந்த அமா்வு தெரிவித்தது.
இதனிடையே, தன் மனு மீதான விசாரணையின்போது சுப்ரமணியன் சுவாமி கூறியதாவது:
அமலாக்க இயக்குநரக அதிகாரி ராஜேஷ்வா் சிங்கிற்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட ‘ரிட்’ மனு, ஏா்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதற்கான முயற்சியாகும். ஏா்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்குள்ளாக நிறைவு செய்ய உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு தொடக்கத்தில் கூறியிருந்தது.
பலம் வாய்ந்த சில நபா்களுக்கு சாதகமாக அந்த வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் முயற்சி நடக்கிறறது. எனவே, அமலாக்க இயக்குநரக அதிகாரி ராஜேஷ்வா் சிங்கிற்கு எதிரான வழக்கு விசாரணையில் என்னையும் ஓா் மனுதாரராக சோ்க்க வேண்டும் என்று சுப்ரமணியன் சுவாமி கூறினாா்.
முன்னதாக, ராஜேஷ்வா் சிங்கிற்கு எதிரான ‘ரிட்’ மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றறம், அதில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் மணிந்தா் சிங்கின் உதவியை கோரியதுடன், 2ஜி வழக்கு தொடா்பாக நிலுவையில் உள்ள வழக்குகளுடன் அந்த வழக்கையும் சோ்த்து. அத்துடன், அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.