85 வயதில் 30 ஆசனம்; தேவெ கௌடாவின் யோகாப் பயிற்சி மட்டும் அதிகக் கவனம் பெற்றது ஏன்?

4வது சர்வதேச யோகா தினம் நேற்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. பூமியில் இருந்து சுமார் 18 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள லடாக் முதல் கன்னியாகுமரி வரை பல பகுதிகளில் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
85 வயதில் 30 ஆசனம்; தேவெ கௌடாவின் யோகாப் பயிற்சி மட்டும் அதிகக் கவனம் பெற்றது ஏன்?

4வது சர்வதேச யோகா தினம் நேற்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. பூமியில் இருந்து சுமார் 18 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள லடாக் முதல் கன்னியாகுமரி வரை பல பகுதிகளில் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

லடாக்கில் வீரர்கள் சூரிய நமஸ்காரம் செய்தது, டேராடூனில் பிரதமர் மோடி பங்கேற்ற யோகா நிகழ்ச்சி, பாபா ராம்தேவின் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி என ஏராளமான யோகா நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் நேற்று சமூக தளங்களிலும், முக்கியச் செய்திகளிலும் வலம் வந்து கொண்டிருந்தது.

இதற்கிடையே, முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளத் தலைவருமான தேவெ கௌடா மேற்கொண்ட யோகா பயிற்சிகளும், புகைப்படங்களும் சமூக தளங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு விமரிசிக்கப்பட்டது.

நேற்று காலையிலேயே, தனது இல்லத்துக்கு பத்திரிகையாளர்களை வரவழைத்த தேவெ கௌடா, பிரதமர் மோடி தனது மகன் குமாரசாமிக்கு விடுத்த சவாலை தான் ஏற்றுக் கொண்டு அவருக்கு ஆசனங்கள் செய்து காட்டுவதாக அறிவித்தார்.

பத்திரிகையாளர்கள் முன்னிலையில் 85 வயதில் சுமார் 30 யோகாசனங்களை செய்து காட்டி இளைஞர்களைக் கூட வியப்பில் ஆழ்த்தினார் தேவெ கௌடா. தனக்கு ஏற்பட்ட முட்டி வலிக்கு நிவாரணம் தேடி யோகாவை நாடியதாகவும், அதன் பிறகு நல்ல மாற்றம் கிடைத்ததாகவும் கூறியிருக்கும் தேவெ கௌடா, தனது படுக்கையில் படுத்தபடி யோகாசனங்களை செய்ததோடு, சில போஸ்களையும் கொடுத்தார். இரண்டு கைகளையும் நீட்டிக் கொண்டு, கால்களை ஒரு பக்கமாக மடக்கியபடி அவர் கொடுத்த போஸ்கள் சிலருக்கு சிரிப்பை வரவழைத்தாலும், இந்த வயதில் யோகாசனம் செய்து காட்டி அசத்தும் முன்னாள் பிரதமருக்கு நிச்சயம் பலர் சபாஷ் சொல்லியிருப்பார்கள்.

தேவெ கௌடா குறித்து அவருக்கு யோகா பயிற்சி அளித்து வரும் 35 வயது இளைஞர் கார்த்திக் கூறுகையில், சுமார் 800 பேருக்கு யோகா கற்றுக் கொடுக்கிறேன். அதில் தேவெ கௌடா மட்டும் முக்கியமானவர். எப்போதுமே அவர் தான் ஒரு அரசியல் தலைவர் என்று காட்டிக் கொண்டதில்லை. மிகவும் எளிமையான மனிதர் என்று கூறினார்.

யோகா செய்யும் போது தேவெ கௌடா கொடுத்த போஸ்கள் வேண்டுமானால் சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால், இத்தனை ஆசனங்களை செய்து அசத்தும் தேவெ கௌடாவைப் பார்த்து இளைஞர்களே வெட்கப்பட வேண்டும் என்பதுதான் நிதர்சனம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com