வி.பி.சிங்: வரலாறு நினைவுகொள்ள வேண்டிய ஒரு இந்திய பிரதமர்

இந்தியாவின் 7-ஆவது பிரதமர் வி.பி.சிங்கின் 87-ஆவது பிறந்த தினம் நேற்று (திங்கள்கிழமை) கொண்டாடப்பட்டது.
வி.பி.சிங்: வரலாறு நினைவுகொள்ள வேண்டிய ஒரு இந்திய பிரதமர்

இந்தியாவின் காங்கிரஸ் அல்லாத 2-ஆவது பிரதமராக வி.பி.சிங் 1989-ஆம் ஆண்டு பதவியேற்றார். அதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் தான் அவர் பணியாற்றி வந்தார்.  

வி.பி.சிங், இந்திரா காந்தி காலத்தில் காங்கிரஸ் கட்சியில் சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வகித்து வந்தார். வி.பி.சிங் பணியை கண்டு வியந்த இந்திரா காந்தி உத்தர பிரதேசத்தின் முதல்வராக அவரை 1980-ஆம் ஆண்டு நியமித்தார். உத்தர பிரதேசத்தில் வழிப்பறி கொள்ளைகளை தடுக்க முடியாமல் சிரமப்பட்ட அவர் தனது பணியை சரிவர செய்யாததால் பதவி விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, 1983-இல் இவருடைய தனிப்பட்ட கண்காணிப்பில் சில கொள்ளயர்கள் தாமாக முன் வந்து சரணடைந்தனர். 

மிஸ்டர் கிளீன்: 

பின்னர், ராஜீவ் காந்தி ஆட்சியில் 1984-ஆம் ஆண்டு முதல் நிதி அமைச்சராக செயல்பட்டு வந்தார். இவருடைய பதவிக்காலத்தில் நிதி அமைச்சக பணிகள் சிறப்பாக இருந்தது. இதனால், அவர் பிரபலமாக தொடங்கினார். நிதி அமைச்சகத்தின் அமலாக்கத்துறை பிரிவனருக்கு அதீத அதிகாரங்களை வழங்கி வரி ஏய்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். 

அதன் நீட்சியாக திருபாய் அம்பானி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்களில் இல்லங்களில் சோதனை நடத்தக் கூட அவர் தயங்கவில்லை. இதுமட்டுமின்றி எண்ணற்ற நிறுவனங்களிலும் இவர் அதிரடி சோதனை நடத்தினார். அவர் சோதனை நடத்திய சில நிறுவனங்கள் காங்கிரஸ் கட்சிக்கு நிதி வழங்கும் நிறுவனங்கள். அதனால், ராஜீவ் காந்திக்கு நெருக்கடி ஏற்பட வி.பி.சிங்கை நிதித் துறையில் இருந்து பாதுகாப்புத் துறைக்கு மாற்றினார்.

பாதுகாப்புத் துறைக்கு மாறிய பின்பும் தனது வேட்டையை வி.பி.சிங் நிறுத்தவில்லை. பிரபல முறைகேடான போபர்ஸ் முறைகேடு ஸ்வீடன் ரேடியோவில் வெளியே கசிந்தது. இந்த விவகாரத்தில் வி.பி.சிங் விசாரணை மேற்கொள்ள, அது ராஜீவ் காந்தியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இது பிற்காலத்தில் ராஜீவ் காந்தியின் தோல்விக்கு முக்கிய பங்கு வகித்தது. இதையடுத்து, வி.பி.சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதன் பிறகு இவர் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஆட்சியை கொண்டுவர முற்பட்டார். அதனால், ஜனமோர்ச்சா என்ற புதிய கட்சியை வி.பி.சிங் தொடங்கினார். அதன்பிறகு ஜனதா கட்சி, லோக் தள கட்சி, மதச்சார்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஜனதா தளம் என்ற கட்சியை அவர் நிறுவினார். அதற்கு அவரே தலைவராக பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து மாநிலக் கட்சிகளான திமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தேசிய முன்னணி கூட்டணியை உருவாக்கினார். அதற்கு பயன் அளிக்கும் வகையில் அவர் 1989 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 7-ஆவது பிரதமராக பொறுப்பேற்றார். இவருடைய ஆட்சிக்கு ஒரு சில புரிந்துணர்வுடன் பாஜகவும் ஆதரவு அளித்தது. 

மண்டல் கமிஷன் பரிந்துரைகள்:

1979-ஆம் ஆண்டு ஜனதா கட்சியால் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை குறித்து அறிய முன்னாள் பிகார் முதல் மண்டல் தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் இந்தியாவில் 51 சதவீத மக்கள் தொகை இதர பிற்படுத்தப்பட்ட மக்களை கொண்டுள்ளது என்ற முடிவுடன் வந்தது. அதற்கு, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை 27 சதவீதமாக உயர்த்துமாறு இந்த கமிஷன் பரிந்துரைத்தது. 

ஆனால், இந்த பரிந்துரைகள் ராஜீவ் காலத்திலும் செயல்படுத்தவில்லை. பிரதமராக பொறுப்பேற்ற வி.பி.சிங் மண்டல் பரிந்துரைகளை அமல்படுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. இந்த போராட்டங்கள் வி.பி.சிங் ஆட்சிக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்தது. 

ராம ரத யாத்திரை:

இந்த பிரச்னை முடிவுக்கு வருவதற்குள் 1990-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி பாஜக அயோத்தியை நோக்கி ராம் ரத யாத்திரையை மேற்கொண்டது. சோம்நாத்தில் தொடங்கிய இந்த யாத்திரை அத்வானி தலைமையில் எண்ணற்ற சங் பரிவார் அமைப்பு ஆதரவாளர்களுடன் ஒரு நாளைக்கு 300 கி.மீ தூரம் பயணம் மேற்கொண்டது. இந்த யாத்திரை வட இந்தியாவில் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் இருந்ததாக கருதப்பட்டது. அதனால், தனது ஆட்சிக்கு ஆதரவு அளித்த போதும் அத்வானியை கைது செய்யுமாறு அப்போதைய பிகார் முதல்வர் லாலு பிரசாத்திடம் வி.பி.சிங் கூறினார். இதையடுத்து, உத்தர பிரதேச எல்லையில் நுழைவதற்கு முன்பு அத்வானி கைது செய்யப்பட்டார். 

அத்வானி மீதான இந்த கைது நடவடிக்கையால் வி.பி.சிங் ஆட்சி மீதான ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. அதனால், பிரமதர் பதவி வகித்து 1 ஆண்டு நிறைவடைவதற்குள் தனது பதவியை அவர் ராஜிநாமா செய்ய நேரிட்டது. 

பிற்காலத்தில் அரசியல் பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற போதும் வி.பி.சிங் மக்கள் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். 2006-ஆம் ஆண்டு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் நில கையகப்படுத்தியதற்கு எதிராக விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுத்து வழி நடத்தினார். 

இவர் 2008 நவம்பர் மாதம் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். 

தனது பணியை சிறப்பாக செய்ய முடியவில்லை என்று பதவி விலக முற்பட்டு, சமூக நீதியை நிலைநாட்டி, மக்கள் ஒற்றுமைக்காக ஆட்சி கலைவதை கூட கருத்தில் கொள்ளாமல் நடவடிக்கை எடுத்த பிரதமரை வரலாறு நினைவு கொள்ள வேண்டும். 

இந்திர காந்தியின் அவசர நிலையை நினைவில் கொள்ளும் வரலாறு அதே தினத்தில் பிறந்த விஸ்வநாத் பிரதாப் சிங்கையும் வரலாறு நிச்சயம் நினைவில் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com