சொத்து குவிப்பு புகார்: 2ஜி வழக்கில் தொடர்புடைய அமலாக்கத்துறை அதிகாரியை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில், 2ஜி வழக்கில் தொடர்புடைய அமலாக்கத்துறை அதிகாரியை விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
சொத்து குவிப்பு புகார்: 2ஜி வழக்கில் தொடர்புடைய அமலாக்கத்துறை அதிகாரியை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு 
Published on
Updated on
1 min read

புது தில்லி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில், 2ஜி வழக்கில் தொடர்புடைய அமலாக்கத்துறை அதிகாரியை விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அமலாக்கத்துறையில் இணை இயக்குநராக இருப்பவர் ராஜேஸ்வர் சிங். இவர் 2ஜி மற்றும் ஏர்செல் - மேக்சிஸ் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரித்து வந்தார். இந்நிலையில் ராஜேஸ்வர் சிங் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவரை பணியிலிருந்து விடுவித்து விசாரிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி, ராஜ்னேஷ் கபூர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு ராஜேஸ்வர் சிங் கடந்த வாரம் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தன் மீது அபாண்டமாக குற்றம் சாட்டப்படுகிறது என்றும், 2ஜி மற்றும் ஏர்செல் - மேக்சிஸ் வழக்குகளின் விசாரணையை தாமதப்படுத்தவே தன் மீது குற்றம் சாட்டப்படுகிறது என்றும் கூறியிருந்தார்.

அத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற ஒரு குற்றச்சாட்டு எழுந்த போது, அதனை விசாரித்து தன்னை குற்றமற்றவர் என சிபிஐ மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பகம் சான்றிதழ் அளித்தது எனவும் அவர் தனது பதில் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நீதிபதிகள் அருண் மிஷ்ரா மற்றும்  எஸ்.கே கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் மேற்கண்ட வழக்கு புதனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் கூறியதாவது 

2ஜி மற்றும் ஏர்செல் - மேக்சிஸ் உள்ளிட்ட மிக முக்கியமான வழக்குகளை விசாரிப்பவர் அப்பழுக்கற்றவராக இருக்க வேண்டும். உங்கள் மீதான இந்த குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. எந்த விசாரணைக்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு கூறிய நீதிபதிகள் புதன் பிற்பகல் 2 மணிக்கு உத்தரவுகளை வழங்குவதாக தெரிவித்தனர். பின்னர், பிற்பகலில் மீண்டும் நீதிமன்றம் கூடியதும். “ராஜேஸ்வர் சிங் மீதான குற்றச்சாட்டுகளை அரசு விசாரிக்க வேண்டும். 2ஜி மற்றும் ஏர்செல் - மேக்சிஸ் ஆகிய வழக்குகளை விசாரிக்கும் குழுவில் இருந்து ராஜேஸ்வரை விடுவிப்பது குறித்த முடிவினை அரசுதான் எடுக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com