மதுவிலக்கு சாத்தியம்... பிஹாருக்கு நேரில் சென்று பாடம் கற்கும் சத்தீஸ்கர் அரசு

பிஹாரில் அமல்படுத்தியுள்ள மதுவிலக்கு குறித்து ஆராய சத்தீஸ்கர் அரசு சார்பில் 11 பேர் கொண்ட குழு பிஹாருக்கு சென்றுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் கடந்த 2016-ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். மது அருந்திவிட்டு தாக்கப்படுவதால் பாதிக்கப்படும் கிராமப்புற பெண்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அங்கு மதுவிலக்கு அமலுக்கு கொண்டுவரப்பட்டது. பிஹார் அரசின் பொருளாதார கணக்கெடுப்பின் படி மதுவிலக்கு அமலுக்கு வந்த பிறகு பல்வேறு பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது.   

இந்நிலையில், பிஹாரில் மதுவிலக்கு எப்படி சாத்தியமானது, அது வெற்றி பெற மக்கள் ஒத்துழைத்தது குறித்து ஆராய சத்தீஸ்கர் அரசு சார்பில் 11 பேர் கொண்ட குழு பிஹாருக்கு சென்றுள்ளது. 

அதில், பாஸ்டர் தொகுதி மற்றும் ஜான்ஜ்கிர் சாம்பா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையே தினேஷ் காஷ்யப் மற்றும் கமலா தேவி இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் காவார்தா தொகுதி மற்றும் குன்குரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் முறையே அஷோக் சாஹு மற்றும் ரோஹித் குமார் சாய் ஆகியோர் சென்றுள்ளனர். மேலும், சத்தீஸ்கரின் கலால் மற்றும் பதிவுத்துறை செயலாளர் டிடி சிங், தொழிலதிபர் பூல்பசன் பாய் யாதவ், சத்தீஸ்கரின் மகளிர் ஆணையம் முன்னாள் தலைவர் விபா ராவ் மற்றும் சத்தீஸ்கர் தொழில் வர்த்தகச் சபை தலைவர் அமர் பர்வானி ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். 

இந்த குழுவானது நேற்றும் (வியாழக்கிழமை), இன்றும் (வெள்ளிக்கிழமை) பிஹாரில் மதுவிலக்கின் தாக்கம், விளைவுகள், மக்களின் ஒத்துழைப்புகள் குறித்து ஆய்வு நடத்துகின்றனர். .

முதல் நாளான நேற்று அவர்கள் கயா மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களுக்கு சென்றனர். அங்குள்ள கிராமப்புற பெண்களிடம் கடந்த 2 ஆண்டாக அமலில் உள்ள மதுவிலக்கின் தாக்கம் குறித்து கண்டறிந்தனர். 

கயா மாவட்டத்தில், முன்பு உள்நாட்டு மது விற்பனைக்கு பெயர் போன சூர்யமண்டல் கிராமத்துக்கு சென்றனர். அங்கு பிஹாரின் கிராமப்புற மறுவாழ்வு திட்டத்தில் பணிபுரியும் ஜீவிகாவிடம் பேசினர். அவர், மதுவால் பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பொருளாதார பிரச்னை மற்றும் தற்போது அடிப்படை தேவைகளுக்கான பொருட்களை வாங்குவதற்கு அவர்களிடம் இருக்கும் பணம் குறித்து விளக்கினார்.  

இதுகுறித்து, அந்த குழுவில் இடம்பெற்றிருந்த சட்டப்பேரவை உறுப்பினர் ரோஹித் குமார் சாய் கூறுகையில், "2016-இல் மதுவிலக்கு அமல்படுத்தியதில் இருந்து இங்குள்ள கிராம மக்களின் வாழ்கை முறை பன்மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது. மதுவிலக்குக்கு மக்களின் உறுதியும் ஒத்துழைப்பும் உள்ளது" என்றார். 

இந்த குழுவானது இன்றும் பிஹார் மக்களை நேரடியாக சென்று ஆய்வு நடத்தவுள்ளது. 

கடந்த ஆண்டு சத்தீஸ்கர் அரசு, இடைத்தரகர்கள் மூலம் சட்டவிரோதமாக மது விற்பதை தடுக்க அரசு சார்ந்த நிறுவனங்கள் மட்டும் மது விற்பனை செய்ய உத்தரவு பிறப்பித்தது.  3,000 பேர் வரை இருக்கும் கிராமங்களில் மதுபான கடைகளை மூட சத்தீஸ்கர் அரசு முடிவு செய்துள்ளது. 2016-17 நிதியாண்டில் சத்தீஸ்கரின் மது மீதான கலால் வரி 2,2000 கோடி ரூபாயாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com