
மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சார் மாவட்டத்தில் உள்ள ஹஃபீஸ் காலனியில் அமைந்துள்ள பள்ளியில் இருந்து ஜூன் 26-ஆம் தேதி 8 வயது சிறுமி கடத்தப்பட்டார். பள்ளியில் இருந்து சிறுமி வீடு திரும்பாத நிலையில், அப்பகுதி காவல்நிலையத்தில் அச்சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதையடுத்து துரிதமாக செயல்பட்ட காவல்துறை அன்றையே தினமே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், அச்சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அப்போது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட சிறுமி, உடனடியாக இந்தூரில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது உடல்நலம் பெற்று வருகிறார்.
இதனிடையே அச்சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய முயற்சித்த இர்ஃபான் (வயது 20) என்பவனை காவல்துறை உடனடியாக கைது செய்தது. மேலும் குற்றவாளிக்கு உச்சகட்ட தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர். அப்பகுதி முஸ்லிம் அமைப்புத் தலைவர் அந்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்தூர் எஸ்பி-யிடம் மனு அளித்தார்.
மேலும் மண்ட்சார் வழக்கறிஞர் சங்கமும், குற்றவாளிக்கு ஆதரவாக வாதாட மாட்டோம் எனவும், அச்சிறுமிக்கு ஆதரவாக 100 வழக்கறிஞர்களும் ஆஜராக தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கை உடனடியாக முடிக்க வேண்டியும் தலைமை நீதிபதிக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், அச்சிறுமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், செய்தியாளர்களிடம் பேசியதாவது:
சிறுமி நல்ல முறையில் உடல்நலம் பெற்று வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் உடனடியாக விசாரிக்க வேண்டும். இதில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் மிருகங்கள் இந்த பூமிக்கு பாரமாக உள்ளனர். அவர்கள் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.