நம்பிக்கையில்லா தீர்மானம் யோசனை கூறியதே நாங்கள்தான்: ஜனசேனா தலைவர் பவன் கல்யாண்

நம்பிக்கையில்லா தீர்மானம் யோசனை கூறியதே நாங்கள்தான்: ஜனசேனா தலைவர் பவன் கல்யாண்

பொதுமக்கள் ஏற்படுத்திய அதீத அரசியல் அழுத்தம் காரணமாகவே தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்எஸ்ஆர் கட்சியும் இன்று...

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்த மத்திய அரசை எதிர்த்து, அம்மாநிலத்தைச் சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக வெள்ளிக்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. இருப்பினும் அது நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகுவதாக அக்கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு அறிவித்தார். மேலும் அக்கட்சி சார்பில் விரைவில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்ற யோசனையை முதலில் கூறியது நான் தான் என்று நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

பொதுமக்கள் ஏற்படுத்திய அதீத அரசியல் அழுத்தம் காரணமாகவே தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்எஸ்ஆர் கட்சியும் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தன. ஆனால் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று முதலில் யோசனை கூறியது நாங்கள்தான்.

இதனால் மத்திய அரசை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணமில்லை. மாறாக நாடாளுமன்றத்தில் ஆந்திர மாநிலத்துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பாகவும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக விவாதிக்க மட்டும்தான். தற்போது ஏற்பட்டுள்ள அதீத அரசியல் அழுத்தம் காரணமாகவே தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்எஸ்ஆர் கட்சியும் இம்முடிவை மேற்கொண்டுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரிவினையின் போது சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. எனவே இதில் நீதி கிடைக்க காங்கிரஸ் கட்சியும் போராட வேண்டும் என்பதே தார்மீக பொறுப்பாக இருக்க முடியும். ஆனால், தற்போது அவர்கள் அதை மறுக்கின்றனர். சிறப்பு அந்தஸ்து வழங்குவதை விட மக்களாட்சி மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவதான் தற்போதைய தேவையாக உள்ளது. மத்திய அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை மீறுவது சரியாக இருக்காது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com