
புதுதில்லி: அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்யும் பணிகளை அமலாக்கத்துறை துவங்கியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர் இந்திய வங்கிகளிடம் இருந்து கடன் பெற்று அதனை திரும்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விட்டார்.
இதனிடையே தனது நிறுவன விளம்பர லோகோவினை பார்முலா-1 கார் பந்தயங்களில் இடம்பெறச் செய்யும் பொருட்டு, இங்கிலாந்து மற்றும ஐரோப்பிய நிறுவனங்களுக்கு இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்களை அளித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த பணபரிமாற்றத்திற்கு ஆர்.பி.ஐயிடம் முன் அனுமதி பெறாமலும், அன்னியச் செலாவணி ஒழுங்குமுறை சட்ட விதிகளுக்கு எதிராகவும் செயல்பட்டதாக அவர் மீது அமலாக்கத்துறை வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து அவருக்கு அளிக்கப்பட்டிருந்த விலக்கு அனுமதியினை 2016-ஆம் ஆண்டு தில்லி நீதிமன்றம் நீக்கிக் கொண்டது. இதனை அடுத்து அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக தேடப்படும் குற்றவாளி ஒருவரது சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்ற இந்திய தண்டனை சட்டப் பிரிவு 83-ன் படி, விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்யும் பணிகளை அமலாக்கத்துறை தற்பொழுது துவங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.